world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அதானி நிறுவன ஒப்பந்தத்தை  மறுபரிசீலனை செய்யவில்லை

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவில்லை என இலங்கை எரிசக்தித் துறை அமைச்சக செயலாளர் தயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். அந்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்திக்காக 442 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த அதானி நிறுவனம் அத்திட்டத்தை திரும்பப்பெறுவதாக பிப்ரவரி 12 அன்று அறிவித்திருந்தது. இலங்கை அரசு விரும்பினால் எதிர்காலத்தில் ஒத்துழைப்போம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில்  ஹேமபால இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் கூட்டணி பிரிந்ததாக  உளறும் டொனால்டு டிரம்ப் \

பிரிக்ஸ் நாடுகள்  பிரிந்து விட்டதாக டிரம்ப் உளறியுள்ளார்.  “பிரிக்ஸ் நாடுகள் நமது டாலரை அழிக்க முயன்றனர். அவர்கள் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்க முயன்றனர். நான் பதவிக்கு வந்ததும், டாலருக்கு மாற்றான நாணயத்தை உருவாக்கினால் 100 சதவீதத்துக்கும் மேல் வரிவிதிப்பேன் என்று எச்சரித்தேன். அதன் பின்னர் அவர்களைப் பற்றி நான் கேள்விப்படவே இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு பிரிந்துவிட்டது” என உளறியுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு 

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க தூதர் சந்தித்துள்ளார். அமெரிக்க - ரஷ்ய அதிகாரிகள் நடத்திய போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, ஜெலன்ஸ்கி ஒரு “சர்வாதிகாரி”, அவர் விரைந்து செயல்பட வேண்டும் அல்லது தனது நாட்டை இழக்க வேண்டும் என டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. எனினும் அந்த பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

பிரான்ஸ் ஜனாதிபதி  அமெரிக்கா பயணம் 

அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து பேசுவதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்கா செல்லவுள்ளார். உக்ரைன் - ரஷ்யா போரில் அமெரிக்காவை விட ஐரோப்பிய நாடுகள் அதிகளவு உதவி செய்துள்ளது. எனவே போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளின் குரல் மதிக்கப்பட வேண்டும் என அந்நாடுகள்  தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த மக்ரோன் அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏற்றுமதியை அதிகரிக்க  பாகிஸ்தான் திட்டம் 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதியை 60 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதற்கான விரிவான உத்தியை உருவாக்க பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் நிலையான கட்டணச் சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாக பாக் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.