what-they-told

img

எல்லா வகுப்புக்கும் என்டிரன்ஸ் எக்ஸாம்! - ஜிஜி

நாட்டு நடப்பு

காட்டில் உள்ள சில விலங்கு  கள் சேர்ந்து ஒரு பள்ளிக் கூடத்தை தொடங்கின. அதில்  சிங்கம் கரஸ்பாண்டட் ஆகவும், யானை நிறு வனராகவும், புலி தலைமை ஆசிரியராகவும் இருந்தன. பள்ளியின் மாணவர்களாக பறவையும், அணிலும், மீனும், நரியும், முயலும், ஆமையும், ஒரு கரடியும் இருந்தன. பள்ளியில் ஒரு பரந்த அடிப்படை கொண்ட கல்வியைத் தரும் நோக்கத்தில் பாடத்திட்டத்தில் நீந்துதலையும், பறத்தலையும், மரமேறுதலையும், நிலத்தில் வளை தோண்டுதலையும் சேர்ப்பதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி எல்லா விலங்குகளும் எல்லாப் பாடங்களையும் கட்டாயமாகப் படிக்க வேண்டும். நான்கு பாடங்களில் மூன்றிலாவது தேர்ச்சிபெற வேண்டும். அப்போதுதான் அடுத்த மேல் வகுப்பிற்கு செல்ல முடியும் என்பது விதியாக வைக்கப்பட்டது.  அணிலோ மரமேறுவதில் சிறந்து விளங்கியதால் அதில் நல்ல மதிப்பெண் பெற்றது. இருந்தாலும் நீந்துவதில் தோல்வியடைந்தது. பறவையோ பறப்பதில் மிகச்சிறப்பாக தனது திறமையைக் காட்டி அதிக மதிப்பெண் பெற்றது. ஆனால் வளைதோண்டுதலில் அது தன் அலகையும் சிறகுகளையும் உடைத்துக்கொண்டு பின்வாங்க ஆரம்பித்தது. மரமேறுவதிலும் நீந்துவதிலும் அது முட்டை மார்க் வாங்கியது. மீன், நீச்சலில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டது மற்றும் மரமேறுதலில் பாஸ் மார்க் வாங்கியது மற்ற தேர்வுகளில் பூஜ்யம் வாங்கியது. நரியோ ஓரளவுக்கு வளை தோண்டியது, மரமேறுவதில் அதனால் ஒரளவுக்கே செயல்பட முடிந்தது. அதனால் பார்டரில் பாஸ்மார்க் வாங்கியது, மேலும் தனக்கு சுவாசக் கோளாறு இருப்பதாக வயிற்றில் ஒரு பாட்டிலைக்கட்டி அதில் குழாயைக் பொருத்தி அதை மூக்கில் சொருகிக்கொண்டு வெற்றிகரமாக தண்ணீரில் நீந்தியது. முயல் நன்றாக வளை தோண்டியது. மரமேற சிரமப்பட்டது. நீந்துவதிலும் அது சுமாராகவே செயல்பட்டது. ஆமையோ தண்ணீரில் மெதுவாக நீந்தியது. தரையில் பள்ளம்தோண்டி இதுதான் வளை என்று கூறியது, மெதுவாக மரமேறியது எல்லாவற்றிலும் சுமாரான மதிப்பெண் பெற்று பாஸாகிவிட்டது. கரடியின் கதைதான் பரிதாபமாக இருந்தது. அதனால் நீரிலும் நீந்த முடியவில்லை, நிலத்திலும் வளைதோண்ட முடியவில்லை. மரத்திலும் ஏற முடியவில்லை. பறக்கவும் முடியவில்லை. அதனால் எல்லா பாடங்களிலும் பெயிலாகிவிட்டது. 

அதிக மதிப்பெண் பெற்ற மாணவராக நரி அறிவிக்கப்பட்டது. நான்கில் மூன்றில் சுமாரான மார்க்குகளில் ஆமை தேர்வாகியிருந்தது. நரியும், ஆமையும் அடுத்த மேல் வகுப்புக்கு தேர்வு பெற்றன. இந்த அறிவிப்பைக் கேட்டு கரடிக்கு கோபம் கோபமாக வந்தது. அது சிங்கம், யானை, புலியிடம் அவை வகுத்துள்ள கல்வி திட்டத்தை எதிர்த்தது. ‘‘இதுவா பரந்த அடிப்படையிலான கல்வித்திட்டம்? அவரவர்க்குள்ள திறமையை சோதித்து அறிவதுதான் சிறந்த கல்வித் திட்டமாக இருக்கும். நீங்கள் செய்வது ஏமாற்று வேலை. நான் இந்தப் பள்ளியிலிருந்து விலகுகிறேன்.’’ என்றது.  கரடி சொன்னதைக் கேட்டு சிங்கத்துக்கும், புலிக்கும் கோபம் கோபமாக வந்தது. ஆனால் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்துவிட்டு யானை பேசியது, ‘‘கரடியாரே அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர். நாட்டிலே நடப்பதைவிட காட்டில் நாங்கள் சிறப்பான கல்வி தருகிறோம். எந்தக்காட்டிலும் இதுபோன்ற கல்வி திட்டம் இல்லை. ரெண்டுநாள் அவகாசம் தருகிறோம் யோசித்துவிட்டு பதில் சொல்லுங்கள்.’’ என்றது. யானையின் பேச்சில் சமாதானமடையாத கரடி உடனே அங்கிருந்து புறப்பட்டது. நேரே காட்டிலிருந்து வெளியே வந்து பக்கத்தில் உள்ள நகருக்குள் நுழைந்தது. அந்த மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க மேடையில் ஒரு நபர் பேசிக்கொண்டிருந்தார். ‘‘மூன்றாம், ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வாம் ஏன் எல்லா வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வை வைத்துவிடுங்கள். நீங்கள் கொள்ளையடிக்க வசதியாகப் போய்விடும். மக்களே நாம் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம் என்று இப்போது புரிகிறதா?’’ என்று பேசினார். அவர் சொன்னதை கேட்டு கும்பல் கை தட்டியது. ‘‘பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை கவர்மெண்ட் தானே நடத்துது. கவர்மெண்ட் நடத்துன பொதுத்தேர்வுல பாஸ் பண்ண மாணவர்களுக்கு கல்லூரியில சேர நீட்டு, கேட்டுன்னு எதுக்கு திரும்பவும் தேர்வு. எல்லாம் இந்த கார்ப்பரேட் கம்பெனிகாரங்க கோச்சிங் சென்டர் ஆரம்பிச்சு கொள்ளை லாபம் அடிக்கறதுக்கான ஏற்பாடு.’’ என்றார் ஆவேசமாக. அதற்கும் கைதட்டல். 

‘‘இது என்ன அநியாயமா இருக்கு. ஏற்கெனவே பாஸ்பண்ண ஒரு மாணவன் அடுத்த வகுப்பு போறதுக்கு திரும்பவும் ஏன் தேர்வு எழுதணும்ங்கறாங்க. பாவம்பா பசங்க.’’ என்று எண்ணியவாறே கரடி அங்கிருந்து கிளம்பியது. சிறிது தூரம் போனதும் அதற்கு பசிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் ஏதாவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்தவாறே ஒரு காம்பவுண்டிற்குள் நுழைந்தது. அது ஒரு கல்லூரி அலுவலகம் போல இருந்தது. உள்ளே ஏதாவது கிடைக்குமா என்று தேடிப்போனது. அது போன இடத்தில் லிப்ட் ஒன்று இருந்தது. அதில் உள்ள சிவப்பு பட்டன் அழகாக இருக்க அதை அழுத்தியது கரடி. லிப்ட் உடனே திறந்து கொண்டது. லிப்ட் திறந்ததும் உள்ளே போன கரடி அதை சுற்றிப் பார்ப்பதற்குள் கதவு மூடிக்கொண்டது. கரடிக்கு பயமாகிவிட்டது. தன்னை யாரோ அடைத்துவிட்டார்கள் என்று எண்ணி லிப்டில் உள்ள பட்டன்களை அழுத்தியது. அது அழுத்தியதும் லிப்ட் மேலே செல்ல ஆரம்பித்தது. லிப்ட் நான்காவது மாடியில் திறந்து  கொள்ள அதிலிருந்து உடனே வெளியேறி யது கரடி. அந்த தளத்தில் நிறைய புத்தகங்  கள் ரேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டி ருந்தன. நிறைய வரிசைகளில் அடுக்கப்பட்டி ருந்த புத்தக ரேக்குகளை மெதுவாக பார்த்துக்கொண்டே நகர்ந்தது. அது சென்றுகொண்டிருந்த வரிசையின் இரண்டு வரிசை தள்ளி மனிதர்கள் பேச்சுக்குரல் கேட்டது. பக்கத்து வரிசைக்குள் மெதுவாக நுழைந்து அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்டது கரடி.

``அண்ணே. புதிய கல்விக்கொள்கையின் டிராப்ட்தான் வெளியிட்டிருக்காங்க அதுக்குள்ளே நீங்க அதுல இருக்கறதை செயல்படுத்த அறிவிப்பு கெத்தா வெளியிட்டுட்டீங்க!’’  ``அண்ணே அதைவிட சூப்பர் என்னதெரி யுமான்ணே, மருத்துவம் முடிச்சவங்க எக்ஸிட் எக்ஸாம் எழுதணும்னு சென்டர்ல சொல்லி அமலாக்கியிருக்கீங்களே. சேன்ஸே இல்லண்ணே!’’ ``டேய்... டேய் இதெல்லாம் பிஸ்கோத்து. ஒண்ணுமில்லடா. அடுத்த வருஷத்துல இருந்து பாருங்க. ஒரு வகுப்புல இருந்து அடுத்த வகுப்புக்கு போறதுக்கு எக்ஸாம் பாஸ்பண்ணா மட்டும் போதாது, எண்டிரன்ஸ் எக்ஸாமும் எழுதி பாஸாகணும்னு கல்வி திட்டத்துல மாற்றம் கொண்டுவர தலைகிட்டே சொல்லி வேலை நடந்துகிட்டிருக்கு. இனி ஒரு பயலும் டியூஷன் சென்டர் போய் படிக்காம பாஸாக முடியாது.’’ ‘‘அப்படின்னா இனிமே நம்ம காட்டுல மழைதான்.’’ என்று எல்லோரும் சிரிக்கும் சத்தம் கேட்டது. அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டி ருந்த கரடிக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘‘என்னய்யா நடக்குது இந்த நாட்டுல? பசங்களை பகடைக்காயாக்கி, கல்வியை கடைச்சரக்கா மாத்திட்டாங்களே, இனிமே நாடு எப்படி உருப்படும்? காட்டுல இருக்கற மிருகங்களை விட ஆபத்தானவங்க இவங்க. முதல்ல இந்த இடத்தைவிட்டு... இந்த இடத்தை விட்டு இல்ல இந்த நாட்டைவிட்டே எவ்வளவு சீக்கிரமா காட்டுக்கு போய்விட முடியுமோ அவ்வளவு சீக்கிரமா போயிடணும்.’’ என்று எண்ணியவாறே நாலாவது மாடியிலிருந்து அவசரமாக இறங்கி நாட்டிலிருந்து காட்டிற்குள் ஓடியது கரடி. அதற்கு பசியைவிட இப்போது பயம்தான் அதிகமாக இருந்தது.