1971 - ஐக்கிய நாடுகள் அவையில் உறுப் பினராகச் சீனா அனுமதிக்கப் பட்டது. 1949இலேயே மக்கள் சீனக் குடியரசு உருவாகி விட்டாலும், சீனாவிலிருந்து தப்பியோடிய சியாங் கே-ஷேக், தைவானிலிருந்து கொண்டு, அதனை சீனக் குடியரசு என்று அழைத்துக் கொண்டார். ஐநாவில் இணைவதற்கான மக்கள் சீனத்தின் முயற்சிகள், ஒற்றைச் சீனக் கொள்கையின்படி தோற்கடிக்கப்பட்டன. ஒற்றைச் சீனக் கொள்கை என்பது சீனா என்ற பெயரில் இறையாண்மைகொண்ட ஒரேயொரு நாடுதான் இருக்க முடியும் என்பதுதான் என்றாலும்கூட, பல்வேறு நாடுகளாலும் மாறுபட்ட விதங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. மக்கள் சீனக்குடியரசு, சீனக்குடியரசு (தைவான்) ஆகிய இரண்டுமே ஏற்றுக்கொண்டுள்ள ஒற்றைச் சீனக் கருத்தாக்கம் என்பது, தைவானும் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சீனா என்பதாகும். தைவானிலிருந்துகொண்டு, சியாங் கே-ஷேக் சீனக்குடியரசு என்று அழைத்துக்கொண்டதாலேயே, ‘சீனாவின் முதன்மை நிலப்பரப்பு (மெயின்லேண்ட் சைனா)’ என்ற சொற்றொடர் உருவாகி, 1990களுக்குப்பின், மக்கள்சீனத்தைக் குறிப்பதாக நிலைபெற்றுவிட்டது. ஒற்றைச் சீனாவாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் உள்ளிட்டவை தைவானையும், இடதுசாரி அரசுகளைக்கொண்ட நாடுகள் மக்கள்சீனத்தையும் ஒப்புக்கொண்டன. இதனால், உலகில் மக்கள்தொகையில் முதலிடமும், பரப்பளவில் மூன்றாமிடமும் வகித்த மிகப்பெரிய நாடான சீனா, ஐநாவின் அங்கமாக ஆகமுடியவில்லை. எதிர்த்த நாடுகளில் பல 1960களில் மக்கள்சீனத்தை ஆதரிக்கத் தொடங்கினாலும், ஒவ்வொரு முறையும் எதிர்ப்பினைத் திரட்டி முறியடித்தது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் சில ஆகியவை ஆதரவாக மாறி (பாதிக்கும் அதிகமான)பெரும்பான்மை உருவான போதும், மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு தேவை என்று, சீனக்குடியரசுக்கு(தைவான்) பதிலாக மக்கள்சீனத்தை இணைக்கும் அல்பேனியாவின் தீர்மானம் தோற்கடிக்கப் பட்டது. 1971 பிப்ரவரியில், ஐநா பாதுகாப்பு அவையில் சீனக்குடியரசு(தைவான்) இருப்பது முறையற்றது என்று சோமாலியா கண்டித்தது. 1971 அக்டோபர் 25இல் அல்பேனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைத்ததுடன், ஐநாவில் சட்டவிரோதமாக அங்கம் வகிக்கும் சியாங் கே-ஷேக்கின் பிரதிநிதிகள் வெளியேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்காவும் ஆதரித்தது. ஐநாவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான சீனாவின், வீட்டோ உரிமை யுடன் கூடிய பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் இடம் மக்கள்சீனத்திற்கு மாற்றப்பட, சீனக்குடியரசு என்று அழைத்துக்கொள்ளும் தைவான், இன்றுவரை ஐநாவில் உறுப்பினராகவே இல்லை. ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு நிகழ்வுகளிலும், அமைப்புகளிலும் வேறுபடுத்திக்காட்ட, சைனீஸ் தாய்பேய் என்று தைவான் குறிப்பிடப்படுகிறது.