“1844ம் ஆண்டு கோடைக் காலத்தில் நான் மார்க்சை சந்தித்தபோது கொள்கை விஷயங்களில் எங்களுக்குள் இருந்த ஒற்றுமை தெளிவாயிற்று. எங்களது கூட்டு வேலை அந்த ஆண்டில் இருந்து துவங்கியது. நான் அவருடன் கழித்த பத்து நாட்களை ஓர் அரிய பாக்கியமாக மார்க்ஸ் கருதுகிறார்.” - மார்க்சுடனான தமது முதல் சந்திப்பை இப்படி பதிவு செய்கிறார் ஏங்கெல்ஸ். மார்க்ஸ் மகள், இந்த இருவரின் நட்பைப் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்: “எனக்கு நினைவில் நன்றாக இருக்கிறது இந்த இரு நண்பர்களும் தினசரி கடிதங்கள் எழுதிக் கொண்டனர் மார்க்ஸ் கடிதங்களோடு பேசுவார் இதைவிட என் நினைவுக்கு வருவது சில நேரங்களில் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு அக்கடிதங்களை வைத்துக்கொண்டு சிரிப்பது தான்.” “மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் இருவரிடையே நிலவிய உறவு முன்னோர்கள் மனித நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளையெல்லாம் மிஞ்சக் கூடியது.” - இது மாமேதை லெனின் கூறியது.
மனிதகுல வரலாற்றில் அரை நூற்றாண்டுக் காலம் இரண்டு சிந்தனையாளர்கள் ஒன்றாகவே சிந்தித்து ஒன்றாகவே பழகி ஒன்றாகவே வாழ்ந்து மறைந்தார்கள் என்றால் கார்ல் மார்க்சும் ஏங்கல்சும் தான். பிரெடரிக் ஏங்கெல்ஸ் மார்க்சியத்தின் மூலவர்களில் ஒருவர். மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் என்ற இரட்டையர் இல்லாது மார்க்சியம் இல்லை. மார்க்ஸை விட இளம் வயதிலேயே(24 வயதில்) இங்கிலாந்தின் தொழிலாளி வர்க்கத்தின் நிலை என்ற நூலை எழுதியதில் தொடங்கி தனது இறுதிக் காலத்தில் மார்க்சின் மூலதனத்தை வெளியிடுவது வரை மார்க்சியத்திற்கு ஏங்கெல்ஸ் அளித்திட்ட செல்வம் அளப்பரியது.
1820 நவம்பர் 28ஆம் தேதி பார்மென் என்ற இடத்தில் பிறந்தார். இது ஜெர்மனியில் உள்ள ஒரு சிற்றூர். அவரது தாயார் எலிசபெத் நிவான் ஹார். இவரது குடும்பம் அறிவாளி வர்க்கத்தைச் சார்ந்தது. தந்தையார் ஒரு பணக்கார தொழிலதிபர் குடும்பத்தைச் சார்ந்தவர். தந்தையின் விருப்பம் தனது மகன் ஒரு பெரிய தொழிலதிபராக மாற வேண்டும் என்பது. ஏங்கெல்ஸ்க்கு இதில் ஈடுபாடு இல்லை. மாறாக, வாழ்நாள் முழுவதும் உழைக்கும் வர்க்க மக்களின் பொன்னுலகைப் படைக்கும் கனவோடு மகத்தான புரட்சிகளுக்கு வித்திட்டவர் ஏங்கெல்ஸ். மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு - ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் உள்ள உறவு - ஆகியவைதான் மனிதனது செயலுக்குரிய இரு பகுதிகள் என்பதை மார்க்சும், ஏங்கெல்சும் விளக்குகின்றனர். பொருள் உற்பத்தி தான் மனிதனது வாழ்வைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. உற்பத்தி முறையானது வாழ்க்கை முறையை தீர்மானிக்கிறது. இந்த உற்பத்தி முறை சமூக உறவுகளையும் அரசியல் உறவுகளையும் தீர்மானிக்கிறது. உற்பத்தி சக்திகள் தாம் உற்பத்தி உறவுகளை (மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவுகளை) தீர்மானிக்கின்றன என்பதை மிகவும் தெளிவாக விளக்குகின்றனர். உற்பத்தி சக்திகள் வளரும்பொழுது பழைய உற்பத்தி உறவுகள் அதனுடன் முரண்படுகின்றன. இந்த முரண்பாடு சமூகப் புரட்சியால் தீர்க்கப்படுகிறது. இதன் விளைவாக புதிய அமைப்பு தோன்றுகிறது. இதற்கு ஏற்ற சமூக உறவுகளும் அரசியல் உறவுகளும் தோன்றுகின்றன. வாழ்க்கையை உணர்வு தீர்மானிப்பதில்லை; உணர்வை வாழ்க்கை தீர்மானிக்கிறது என, மனிதகுலத்தின் சிந்தனையில் புதிய வெளிச்சம் பாய்ச்சினார்கள்.
மார்க்சியத்தை முதலில் செயல்முறைப்படுத்திய மேதை ஏங்கெல்ஸ் என்றால் மிகையல்ல. உழைப்பாளர்கள் அமைப்புகளுடன் நேரடி உறவை ஏங்கெல்ஸ் வளர்த்துக் கொண்டார். உழைக்கும் வர்க்க அமைப்புகளை உருவாக்கி அவற்றை ஒன்றிணைத்து ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்கியது ஏங்கெல்ஸின் மிகப்பெரிய வேலை ஆகும். ஏங்கெல்ஸ் ஒரு நல்ல அமைப்பாளர் ஆவார். ஏங்கெல்ஸ் உழைக்கும் வர்க்க ஒற்றுமை பற்றி அதிகம் எழுதினார் அவற்றில் ஏங்கெல்ஸ் வலியுறுத்திக் கூறியது உழைக்கும் வர்க்கப் போராட்டத்திற்கு மூன்று அம்சங்கள் உண்டு; கொள்கை, அரசியல், பொருளாதாரம் ஆகியவையே அவை என்றார். முதலாளித்துவ முறையானது மத்தியதர வர்க்கத்தையும் விவசாயிகளையும் முற்றிலும் சிதைக்கும் என்பதையும் பாட்டாளிகளுடன் விவசாய வர்க்கத்தை எவ்வாறு இணைப்பது என்பது பற்றியும் ஏங்கெல்ஸ் ஆராய்ந்தார். ஏனென்றால் பாட்டாளி வர்க்கம், விவசாய வர்க்கம் இரண்டிற்கும் குணாம்ச வேறுபாடுகள் உண்டு; சிறு, நடுத்தர, பெரிய விவசாயிகள் என்று பிரிவுகள் உள்ளன; கூலி விவசாயிகள் தனியானவர்கள்; இவர்களில் ஒரு பாட்டாளி வர்க்க கட்சி சிறு நடுத்தர விவசாயிகளை கவனமாக அணுக வேண்டும்; ஏனென்றால் கையளவு நிலத்திற்கு சொந்தக்காரர்களாக இருந்தாலும் இவர்கள் நிலத்தை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்; இயந்திரமயம் ஆகும் பொழுது இந்த விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகிறார்கள் இவர்கள் பாட்டாளிகளாக மாறும் தன்மை கொண்டவர்கள் என்று ஏங்கெல்ஸ் விளக்கினார்.
மார்க்ஸ் மறைந்த போது, “என்னை விட பெரிய மனிதரான மார்க்சிற்குரிய புகழின் பயனை நான் பெறவேண்டும் என்பது எனது விதி போலும். எனது வாழ்நாளின் மீதியை பாட்டாளி மக்களுக்கு சேவை செய்வதிலேயே அர்ப்பணிப்பேன்” என்று ஏங்கெல்ஸ் கூறினார். அந்த வார்த்தைகளின்படியே வாழ்ந்து மறைந்தார். 1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஏங்கெல்ஸின் உயிர் மூச்சு நின்றது. இன்றைய காலகட்டம் உலகமய காலகட்டம். இது விஞ்ஞான தொழில்நுட்ப புரட்சியில் விளைந்தது. இதன் விளைவாக முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சியில் புதிய கட்டம் ஏற்பட்டுள்ளது. அதீத சுரண்டல் முதலாளித்துவ அராஜகம் மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” மாமேதை ஏங்கெல்ஸ் எழுதிய இயற்கையின் இயங்கியல் எப்படிச் செயல்படுகிறது என்பதற்கு இன்றைய உலகே சாட்சியம். ஏங்கெல்ஸ் உயர்த்திப் பிடித்த மார்க்சியம் எனும் விஞ்ஞானமே, முதலாளித்துவத்தின் அதீத சுரண்டலுக்கு முடிவு கட்டும். ஏங்கெல்ஸ் ஊழியம் என்றும் மார்க்சியத்தை செறிவூட்டி உயர்த்திப் பிடிக்கும்.
- ந.ராஜா
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர், பெரியநாயக்கன்பாளையம், கோவை