what-they-told

img

ரயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது

தெற்கு ரயில்வே உத்தரவு

சென்னை,அக்.19- ரயில்களில் பட்டாசுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் எடுத்துச் செல்பவர்களைக் கண்காணித்து, ரயில்வே காவலர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொள்ள தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இந்திய ரயில்வே சட்டப்படி, ரயில்களில் பட்டாசுகள், எரிவாயு சிலிண்டர், அமிலம், பெட்ரோல் உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.  மேலும், இவற்றைக் கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்திய ரயில்வே சட்டம் 1989-இன் படி 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி, ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்வதைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு, ரயில்வே காவலர்கள், அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதில், பட்டாசுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்லும் பயணிகளைக் கண்காணித்து, அந்தப் பொருள்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட பயணி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், இதுதொடர்பாக, 182 என்ற இலவச அழைப்பு எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.