what-they-told

img

மஞ்சள் இவர்களுக்கு மங்களகரமானது அல்ல - தாரா

ஊடகங்கள் மக்களின் மனதில் கருத்துக்களை ஆழப்பதிக்கும் வல்லமை கொண்டவை. அதிலும் காட்சி ஊடகத்திற்கான திறன் இன்னும் கூடுதல்.. அந்த வகை யில் சமீபத்தில் ஆழப்பதிந்து பல கேள்விகளை சமூகத்தை நோக்கி கேட்டுக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ஜெயராணி அவர்களின் ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ நூலைத்தழுவிய நாடகம் ‘மஞ்சள்’. நாடகவியலாளர் ஸ்ரீஜித் சுந்தரம் இயக்கத்தில் ஜெய்பீம் மன்றம், அரும்பு மாத இதழ், கட்டியக்காரி இணைந்து வழங்கிய நாடகம் எழும்பூர் டான் போஸ்கோ அரங்கில்  நிகழ்த்தப்பபட்டது.

நாடகத்தின் ஒவ்வொரு வசனமும் அதனை இயக்கி யிருக்கும் விதமும் அருமை.பார்த்த ஒவ்வொருவரின் மனதையும் உலுக்கச்செய்தது.கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கண்கலங்கச்செய்தது.

சாதி அமைப்புகளைப்பற்றி மேலோட்ட மாகப்பார்த்து வாழ்க்கையைத் துரத்தி ஓடிக்கொண்டிருக்கும் நம்மை கொஞ்சம் நிறுத்தி நுட்பமாக சிந்திக்கச் செய்கிறது  இந்த நாடகம். எவ்வளவோ துறைகளில் இந்தியா முன்னேறி இருந்தாலும்  கையால் மலம் அள்ளும் அவலத்தைப்போக்க அரசு இயந்திரங்கள் எந்தவித முன்னெடுப்பும் இல்லை. தூய்மை இந்தியா திட்டத்தினை அமல்படுத்தினாலும் இந்த இழிநிலைக்கு மட்டும் தீர்வு காணப்படவில்லை. காரணம், சாதி அமைப்புடன் மலம் அள்ளும் தொழில் பிணைந்திருப்பது தான் இந்தக் கட்டமைப்பை உடைக்க  ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கான துயரங்களை  யோசித்தால்.. குமட்டல், நிமோனியா, தோல் நோய்கள், ரத்த சோகை, தொற்றுநோய்கள் என ஆடுக்கிய பல.. இவற்றோடு ஆதிக்க சாதியினர் முகத்தில் காட்டும் அருவருப்பு... இப்படியான தீண்டாமையின் வலியை எப்படி இந்த சமூகத்திற்குப் புரிய வைப்பது என்ற கேள்விக்கு பதிலாக இந்த நாடகம் அமைந்துள்ளது. மலம் அள்ளும் தொழிலாளர்களின் நிலை, அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் என மொத்தத்தையும்  அழுத்த மாக பதிவு செய்திருக்கிறது. மஞ்சள். மஞ்சள் நிற மலத்தைப் பார்த்து சாம்பார் கூட இவர்களுக்கு குமட்டுகிறது. இவர்களைப் பொறுத்தவரை மஞ்சள் இவர்களுக்கு மங்களகரமானது அல்ல.

ஒவ்வொரு வசனமும் ஆழமாக சிந்திக்க வைப்பதாக அமைந்திருக்கிறது. சமூகத்தில் கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை எல்லாமே சாதி அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது திறமை யின் அடிப்படையில் இல்லை என்பது பதிவு செய்திருக்கிறது. நாடகத்தின் இந்த வசனம் சமகாலத்தில் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட 'புதிய கல்விக்கொள்கை'யோடு பொருத்தி ப்பார்க்க முடிகிறது. குலத்தொழில் முறையை நடை முறைப்படுத்த முயற்சிக்கும் நாசகரமான வேலை.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மலம் அள்ளுபவர்களுக்கு ஒவ்வொரு பெயர்கள். மேற்கு வங்காளத்தில் தாபுவாளி, கான்பூரில் பால்டிவாளி,பீகாரில் கீனாவாளி , லக்னோ மற்றும் வட இந்தியாவில் கமாய், அரியானாவில் டோக்ரிவாளி,ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தோட்டி,காஷ்மீரில் வாட்டல் இப்படி நேரடியாகவும் மறை முகமாகவும் இவர்களின் இயற்பெயரே மறந்துவிடுமளவுக்கு மாறிவிடுகிறது. ஆந்திராவில் 'தோட்டம்மா'என்ற பெயரை நீக்கி தன்னுடைய இயற்பெயரான 'நாராயணம்மா'என்று அழைக்க ஐம்பது வருடங்காளனது என்ற வசனத்தைக்கேட்டும் போது சமூகத்தின் மீதான கோபமும் ஆச்சரியமும் ஒருங்கே வருகிறது.

பொதுவாக மழை எல்லாருக்கும் பிடிக்கும்.. கவிதையாக, சந்தோசமாக,மண்வாசனையாக இப்படி. ஆனால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு மழை நாற்றம். எவ்வளவோ நூற்றாண்டுகளைக்கடந்துவந்து விட்டோம்.. சுதந்திர இந்தியாவில் ஒருவர் கூடவா இந்த இழிவைப்பற்றி பேசவில்லை என கேள்வி எழாமலில்லை.. உறங்கிக் கிடக்கும் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்திருக்கிறது மஞ்சள். நசுக்கப்பட்ட அவர்களின் குரல் பார்த்த அனைவரின் காதுகளிலும் இப்படி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

“ஆம். சாதிகளற்ற சமுதாயம் உருவாகும் வரை எல்லாருக்கும் மஞ்சள் என்பது மலமே"இது கேட்க   வேண்டி யவர்களின் செவிப்பறையை எட்டும் வரை ஒலிக்க வேண்டும். சமூக அவலங்கள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் மாற்றத்தை நோக்கிய எழுத்தும் கலையும் அவசியம் என்பதை பதிவு செய்திருக்கும் எழுத்தாளர் ஜெயராணி அவர்களுக்கும் நாடகவியலாளர் ஸ்ரீஜித் சுந்தரம் அவர்களுக்கும்  பாராட்டுக்கள்.

;