புதுதில்லி:
“சைவ உணவு சாப்பிடுவோருக்கு கொரோனா வராது; பூண்டு, மஞ்சள்,தேன் போன்றவற்றை சாப்பிடுவதால் இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகம்” என்று சமூகவலைத்தளங்களிலும், வாட்ஸ் ஆப்-களிலும் ஏராளமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அவற்றின் உண்மைத்தன்மை குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் ‘செண்டர் பார் கம்யூனிட்டி மெடிசின்’ பேராசிரியர் டாக்டர் ஆனந்த் கிருஷ்ணன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
நாம் வாழும் மற்றும் வெளிப்படும் சூழல் காரணமாக இந்தியர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கூறுவது, முற்றிலும் அர்த்தமற்றது.கொரோனா வைரஸூக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இதுவரை இல்லை.சில வைரஸ்கள் ஏற்பட்டால், முதல் நோய்த்தொற்றுக்குப் பிறகு ஒருவர் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார். கெரோனா ஒருபுதிய வைரஸ் என்பதால் அது இரண்டாவது தொற்று ஏற்படாது என்று கூறுவதும் கடினம். அதேபோல, சைவ உணவு கொரோனாவைத் தடுக்கிறது என்பதற்கும் ஆதாரம் இல்லை. நிச்சயமாக வைரஸ் பரவுவதற்கான ஆதாரமாக உணவு இல்லை.வீட்டு சமையலறையில் சமைத்த உணவுகளால் எந்த பிரச்சனையும் இல்லை. நன்கு சமைத்த இறைச்சி ஒருபோதும் பிரச்சனையாக இருக்காது.
பூண்டு, மஞ்சள், தேன் போன்றவற்றின் நோய்த்தடுப்பு செயல்பாடுகளும் பொதுவான ஒன்றுதான். நாம் பலஆண்டுகளாக பூண்டு சாப்பிட்டு வருகிறோம். இது உண்மையில் பாதுகாப் பாக இருந்தால் நமக்கு எந்த நோய் களும் இருக்கக் கூடாது. இவ்வாறு டாக்டர் ஆனந்த் கிருஷ் ணன் கூறியுள்ளார்.