1817 - ஆஸ்திரேலியாவுக்கு, ஆஸ்திரேலியா என்று பெயர் சூட்டவேண்டும் என்று, நியூசவுத்வேல்ஸ் மாநில ஆளுநர் லாக்லன் மெக்வரி, ஆஸ்திரேலியாவின் குடியேற்ற அரசுக்குப் பரிந்துரைத்தார். 1824இல் அரசு இதனை ஏற்றதைத்தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியா என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த பெயர், தென்துருவத்தில் இருப்பதாகக் கற்பனை செய்யப்பட்டிருந்த நிலப்பரப்பிற்கு(கண்டம்) சூட்டப்பட்டிருந்த பெயரான டெர்ரா ஆஸ்ட்ரேலிஸ் என்பதிலிருந்து உருவானது. புவியின் வடகோளத்திலிருந்த நிலப்பரப்புகள் மட்டுமே அறியப்பட்டிருந்த பண்டைக் காலத்தில், வடகோளத்தின் நிலப்பரப்புகளை(எடையை?! - புவி சரிந்துவிடாமல்!!) சமன் செய்ய, தென்கோளத்திலும் பெரிய நிலப்பரப்பு ஒன்று இருக்கும் என்று நம்பினார்கள். நிலப்பரப்பு என்ற பொருளுடைய டெர்ரா(ஆங்கில டெர்ரெய்ன்!), தெற்கு என்ற பொருளுடைய ஆஸ்ட்ரேலிஸ் ஆகிய லத்தீன் சொற்களிலிருந்து உருவானது. கி.பி.2ஆம் நூற்றாண்டில், இந்தியப் பெருங்கடல் நிலப்பரப்பால் சூழப்பட்டிருப்பதாக நம்பிய தாலமியின் கருதுகோள்களின்படி உருவாக்கப்பட்ட வரைபடங்களையே பயன்படுத்திக்கொண்டிருந்ததால், ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்திலும், ஆப்ரிக்காவுக்குத் தெற்கேயும் (கடலின்றி) நிலப்பரப்பு இருப்பதாக நம்பப்பட்டதே, கடற்பயணக் காலமான 15ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் மாறியது. 1600களின் கடற்பயணங்கள், இவ்வாறான நிலப்பரப்பு இல்லையென்பதை உணர்த்திய நிலையில், தென்கோடி நிலமாக ஆஸ்திரேலியாதான் இருக்க முடியும் என்று கருதி, 1794இல் இரு தாவரவியலாளர்கள் ஆஸ்ட்ரலேசியா என்றும், 1814இல் மாத்யூ பிலிண்டர்ஸ் டெர்ரா ஆஸ்ட்ரேலிஸ் என்றும் ஆஸ்திரேலியாவைக் குறிப்பிட்டனர். 1544இல் டச்சுக்காரர்கள் சூட்டிய நியூஹாலந்து என்ற பெயரையே, பின்னாளில் ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களும் பயன்படுத்திவந்த நிலையில்தான் ஆஸ்திரேலியா என்ற பெயர் ஏற்கப்பட்டது. உண்மையான தென்துருவ நிலப்பரப்பு 1820களில் உறுதிப்படுத்தப்பட்டாலும், 1890கள்வரை பெயரில்லாமலேயிருந்து, கிரேக்கத்தின் மரீனஸ் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில், ஆர்டிக்குக்கு எதிர்ப்புறம் என்ற பொருளில் உருவாக்கியிருந்த அண்டார்ட்டிக் என்ற பெயர் சூட்டப்பட்டது. 1900இல் வெளிவந்த அமெரிக்க சிறுவர் புதினத்தில் குறிப்பிடப்படும் ஆஸ்(ஓ-இசட்) என்ற கற்பனை நிலப்பரப்பு ஆஸ்திரேலியாவை ஒத்திருந்ததால், அமெரிக்கர்கள் ஆஸ்திரேலியாவை ஆஸ் என்றும் குறிப்பிடுகிறார்கள். இருக்குமிடத்தையொட்டி ‘கீழுள்ள நிலம்’(லேண்ட் டவுன் அண்டர்) என்றும் ஆஸ்திரேலியா பேச்சு வழக்கில் குறிப்பிடப்படுகிறது.