what-they-told

இந்நாள் மே 25 இதற்கு முன்னால்

1977 - நாடகத் துறையைப்போன்றே அழுத்தமான கதைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த திரைப்படத்துறையை(குறிப்பாக ஹாலிவுட்), படமாக்கும் முறைகள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போன்ற தொழில்நுட்பங்களை நோக்கித் திருப்பி, திரைப்படத் தயாரிப்புத்துறையின் மிகமுக்கிய மைல்கல்லாக அமைந்த ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படங்களின் முதல் படம் வெளியானது. திரைப்படத்துறையில் மட்டுமின்றி, பல்வேறு தளங்களிலும், இத்திரைப்படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக, தங்களைத் தாக்க வரும் கண்டங்கடந்த ஏவுகணைகளைத் தடுப்பதற்காக, சீரொளிகளையும்(லேசர்), ஏவுகணைகளையும் பயன்படுத்தி, ரீகன் காலத்தில் அமெரிக்கா உருவாக்கிய பாதுகாப்புத் திட்டம், ஸ்டார் வார்ஸ் என்று மக்களால் அழைக்கப்பட்டது. (தான் ஒரு நடிகர் என்பதால், அப்படி அழைப்பதாக ரீகன் வருத்தப்பட்டார் என்பது தனிச்செய்தி!) இப்படங்களில் வரும் ஜெடாய் வீரர்கள்(ஜப்பானின் சமுராய்களைப்போல!) கடுமையான விதிகளைக் கடைப்பிடிப்பவர்களாகக் காட்டப்பட்டிருப்பதில் சில மாற்றங்களுடன், ஜெடாயிசம் என்றொரு மதம் உண்மையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா, நியூஸீலாந்து உள்ளிட்ட நாடுகளின் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க சதவீதம் இம்மதத்தைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். துருக்கியில் ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் ஜெடாய் ஆலயம்(படத்தில் இடம்பெற்றுள்ளது!) அமைக்க அனுமதி கோரி மாணவர்கள் போராடியது, உலகளாவிய கவனத்தைப் பெற்றது! இப்படங்களில், வேறு கோள்களில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படும் நுண்ணுயிரி, பூச்சி, மீன் உள்ளிட்ட பல உயிரினங்களின் பெயர்கள், புவியில் உண்மையிலேயே கண்டுபிடிக்கப்பட்ட, அவற்றையொத்த உயரினங்களுக்குச் சூட்டப்பட்டிருக்கின்றன! இன்னும் பல துறைகளிலும் தாக்கம் ஏற்படுத்திய இவ்வரிசையில் இதுவரை 12 திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. 1977இல் முதலில் வெளியான இப்படம், உண்மையில் கதையின் நான்காம் பாகமாகும். இது தயாரிப்புச் செலவைப்போல 70 மடங்கு லாபமீட்டியது.

அதைத் தொடர்ந்து, 5,6ஆம் பாகங்களும், 90களின் பிற்பகுதியில் 1,2,3 பாகங்களும், 2000களில் 7,8,9 பாகங்களும், 3 கிளைக்கதைகளும் திரைப்படங்களாக வெளியாகியுள்ளன. இவைதவிர, தொலைக்காட்சித் தொடர்கள், வீடீயோ கேம்கள், பாத்திரங்களின் வடிவங்கள், அவை பொறிக்கப்பட்ட உடைகள் உள்ளிட்ட பலவற்றையும் தயாரித்ததன்மூலம், ஸ்டார் வார்ஸ் ஈட்டியுள்ள ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான தொகையே, உலகில் திரைப்படம் சார்ந்து ஈட்டப்பட்ட மிகப்பெரிய தொகையாகும். 1970களில் இருந்த தொழில்நுட்பங்களோடு ஒப்பிடும்போது மிகப்பெரிய சாதனை என்பதால், முதல் முத்தொகுதி படமாக்கப்பட்டதுகுறித்து, இன்றும் பல அருங்காட்சியகங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.