டாக்கா, செப்.24- வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 1 முதல் செப்டம்பர் 23 வரை டெங்கு காய்ச்சலுக்கு 75 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மொத்தம் 162 பேர் பலியாகியிருப்பதாக உள்ளூர் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து சுகாதார சேவைகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்களாதேஷ் முழுவதும் தற்போது 2018 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் உள்ள 41 மருத்துவமனைகளில் 861 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 1157 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.