what-they-told

img

உடல் பருமனைக் குறைப்பது எப்படி?

எடையைக் குறைக்க வேண்டிய முறைகள்: எடையைக் குறைப்பது சுலபமாகவும் கடைப்பிடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். எடை குறைக்க ஆரம்பித்த பிறகும் உடல் வளமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். திடீரென்று உணவைக் கட்டுப்படுத்தினாலும் உடல் எடை குறையும். ஆனால் உடல் சோர்வடையும். ஆகவே எடையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதுதான் நல்லது. உண்ணும் வைட்டமின், தாதுப்பொருட்கள், உடலுக்கு வேண்டிய அளவு இருக்க வேண்டும். இவ்வுணவில் பால், பழம், தக்காளி, முட்டை, தானியம், அடங்கி இருக்க வேண்டும். ஆனால் “விருந்து உணவு” என்று சொல்லப்படும் வறுத்த, பொறித்த உணவு வகைகள் இல்லாது இருக்க வேண்டும். பழவகைகளும், காய்கறிகளும், உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் அதில் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிகம் அடங்கியுள்ளன. இலையுள்ள காய்கனிகளில் அதிக சர்க்கரை சத்து இல்லை. ஆனால் சதைப்பற்றும் அதிக சாறும் உள்ள கனிவகைகளிலும், உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு வகைகளிலும் அதிக சர்க்கரைச் சத்து உண்டு. ஆகவே இவ்வகை உணவுகளை சாப்பிடக்கூடாது.

தினம் உணவில் எந்த உணவு வகைகளைத் தள்ளுவது?
 

இறைச்சி, வறுத்த பொருட்கள், நெய், கொழுப்பு சத்துள்ள உணவு வகைகள், அதிக மாவுச்சத்து உள்ள உணவு வகைகள் முதலியவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. இதைப் போலவே அரிசி வகை உணவுகள், வாழைப்பழம், கிழங்குவகைகள், வெண்ணெய், கேக், முந்திரி கொட்டை போன்ற வகைகள், கிரீம் முதலியவைகளை ஒதுக்கிவிட வேண்டும். ஏனெனில் ஒரு வறுத்த முந்திரிக் கொட்டை சர்க்கரை இல்லாத ஒரு டம்ளர் டீக்கு சமமானது ஆகும். சினிமா, நாடக அரங்குகளிலும் நான்கு ஐந்து பேர்கள் கூட்டாக பேசிக் கொண்டிருக்கும் பொழுதும் சிறு தீனியாக உண்ணும் பழக்கமும் இருக்கக்கூடாது. அப்படி கட்டாயமாக யாராவது கொடுத்தாலும் நன்றி சொல்லி விலகிக் கொள்ள வேண்டும். இதைத்தவிர உணவின் இடைவேளையில் டீ, காப்பி போன்ற பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

அதிக கலோரி இல்லாத, சுவையுடன் கூடிய பொருளை உணவில் சேர்த்துக் கொள்ள தெரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக பன், ரொட்டிக்கு பதில் சப்பாத்தியும், இனிப்பு வகைகளுக்குப் பதில் பழங்களும், வறுவல் பொருட்களுக்குப் பதில் காய்கறிகளையும் உபயோகிக்க வேண்டும். இவைகள் ஆரம்பத்தில் சுவையாக இல்லாவிட்டாலும் மனஉறுதியுடன் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால் பழக பழகச் சரியாகிவிடும். உணவுக் கட்டுபபாடு ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடுமோ என்று சிலர் பயப்படுகின்றனர். ஆனால் உடலை முறையுடன் வைத்துக் கொண்டால் அது வாழ்வில் சுகத்தையும் இன்பத்தையும் கொடுக்கிறது. உடல் பருமனைக் குறைக்க சிலர் திடீரென்று சில நாட்கள் பட்டினியிலிருந்து பிறகு அதிகமாக உணவு அருந்தினாலும் பிரயோசனம் இல்லை. சிலர் மிக ஆர்வமாக திடீரென்று உடல் பருமனைக் குறைக்க வழி தேடி, அதன்படி ஆரம்பத்தில், சூரத்தனமிருந்து பிறகு கடைப்பிடிக்காமல் போய்விடுகின்றனர். ஆகவே உடல் எடையைக் குறைக்க கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப் பழகிக் கொண்டு, உணவு அருந்தும் நேரம் போக, மற்ற இடைப்பட்ட நேரத்தில் உணவு அருந்தாது இருந்து பழகினால் நிச்சயம் உடல் இளைப்பது உறுதி.

உணவின் அளவைக் குறைக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்:

1. மெதுவாகச் சாப்பிட வேண்டும். அப்பொழுது மூளையில் உள்ள பசி உணர்வை தூண்டும் இடம் பசியை தூண்டாது மந்தப்படுத்தப்படுகிறது. அதிக உணவு அருந்துவதற்கு முன்பே            பசியைத் தணித்து விடுகிறது.
2. உணவை நன்றாக மென்று தின்ன வேண்டும்.
3. உணவை மற்றவர்கள் பரிமாறச் செய்யாது தானாகவே போட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பழக வேண்டும்.
4. உணவருந்தும் பொழுது புரத உணவை முதலில் உண்ணக்கூடாது. இவற்றைக் குறைவாக உண்ண இதர வகைகளை முதலில் உண்ண வேண்டும்.

பருத்த மேனி குறைய மருந்துகள்

உடல் இளைக்க உதவும் அருமருந்துடன் நம் மனக்கட்டுப்பாடும் அவசியம். ஏனெனில் இதற்கான மருந்துகள் பசியை உண்டாக்காது செய்து உடலை இளைக்க வைக்கிறது. ஆனால் மருந்தை நிறுத்தினால் நன்றாக பசி வந்து விடுகிறது. ஆகவே மனக்கட்டுப்பாடு தான் தேவை. மருந்தை மட்டும் நம்பி இப்பிணியைத் தீர்க்க இயலாது. 

உடற்பயிற்சி

உடற்பயிற்சி, உடலிலுள்ள கொழுப்பைக் குறைத்துவிடும். உண்மைதான். இதற்கு நீச்சல், வேகமாக நடப்பது, யோகாசனம் போன்றவை உதவும். யோகாசனம் தினம் காலையில் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். எளிதான உடற்பயிற்சி செய்து அளவான உணவையும் அருந்தலாம். இதில் கவனம் தேவை. உடலை அமுக்கிவிடுவதனாலும், நீராவிக் குளியலினாலும் குறைந்த அளவில் உடலை இளைக்க வைக்கும். ஆனால் மணிபர்சை மிகவும் இளைக்க வைக்கும் என்பது உறுதி. உடல் பருமனை குறைக்க சில சமயம் அறுவை சிகிச்சை கூட செய்யப்படுகிறது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு விளைவுகளான அதிகமான வயிற்றுப்போக்கு, சோர்வு முதலியவைகள் தொந்தரவுகளை ஏற்படும்.  குழந்தைப் பருவத்திலும், இளம் பருவத்திலும் கருவுற்று பிரசவித்த பின்னும் உணவை அளவுடன் கலப்புணவாக அருந்த வேண்டும். இவ்வித  சிகிச்சையில் உயிர் வாழும் நாள் அதிகரிக்கும்.

தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1