what-they-told

img

கீழடி அகழ்வாய்வுப் பணிகள் மேலும் சில கிராமங்களைச் சேர்க்க அனுமதி கோரப்பட்டுள்ளது

மதுரை, செப்.1- கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வு பணி மேற்கொள்ள மத்திய தொல்லியல்துறையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தமிழக  தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன் கூறினார். கீழடியில் நடைபெற்றுவரும் ஐந்தாம்கட்ட அகழாய்வுப்  பணிகளை கேரள மாநில தொல்லியல் துறை இயக்குனர் செரியன், தமிழக தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் உதயச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கீழடியில் நடைபெற்று வரும் ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள்  ஒரு மாத காலத்தில் நிறைவு பெறும். தற்போது நடைபெறும் அகழ்வாய்வில் புதிதாக இரட்டைச்சுவர், தண்ணீர் தொட்டி, பெரிய பானைகள், உறைகிணறுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் சங்ககாலத் தொன்மையை அறியமுடிகிறது. ஏற்கனவே நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு, அதன் முடிவுகள் பெறப்பட்டு வருகிறது. இது குறித்து முழு ஆய்வறிக்கை வந்ததும் அதன் முடிவுகள் வெளியிடப்படும்.

கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறுவதற்கு மத்திய தொல்லியல் துறையின் முன் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி வந்ததும் அடுத்தகட்ட ஆராய்ச்சிப் பணிகள் தொடங்கப்படும் என்றார். ஐந்தாம் கட்ட அகழாய்வு 47 லட்சம் ரூபாய் செலவில்  எட்டரை ஏக்கர் பரப்பளவில் 39 குழிகள் (10.2 மீட்டர் நீள அகலம் உள்ளது) தோண்டப்பட்டு நடைபெற்று வருகிறது.  விவசாயி நீதி என்பவரது நிலத்தில் கிடைத்த சுடுமண் குழாயை பார்வையிட்ட உதயச்சந்திரன், இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவ-மாணவிகளை பாராட்டினார்.  நீதியம்மாள், முருகேசன் ஆகியோரது நிலங்களில் கிடைத்த செங்கல் கட்டுமானம், சுடுமண் குழாய், அரை இஞ்ச் அளவிலான சுடுமண் பானை, சூதுபவளம் (இதில் பன்றி உருவம் பதிக்கப்பட்டுள்ளது). பெண்கள் அணியும் கழுத்து மாலை பதக்கம், ஆகியவற்றையும் உதயச்சந்திரன் பார்வையிட்டார். ஆய்வின்போது, இணை இயக்குநர் சிவானந்தம், காப்பாட்சியர் ஆசைத்தம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

பன்றி உருவம் பொறிக்கப்பட்ட சூதுபவளம்