what-they-told

img

ஷ்ரிங்க்ஃப்ளேஷன் (Shrinkflation) என்றால் என்ன?

நீங்கள் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட்டில் எவ்வளவு பிஸ்கெட் இருந்தது என்று எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? எத்தனை பிஸ்கெட் என்று எண்ணிக்கூடப் பார்த்திருப்போம். ஆனால், எவ்வளவு எடை என்பதை பொதுவாகக் கவனிப்பதில்லை! முதல் படத்திலிருக்கிற பிரிட்டானியா ட்ரீட் பிஸ்கெட் பாக்கெட்டின் எடையைப் பாருங்கள்... 64 கிராம்! அடுத்த படத்திலிருக்கிற காட்பரி போர்ன்விட்டா பிஸ்கெட் பாக்கெட்டின் எடை 46.5 கிராம்! அடுத்துள்ள காட்பரி ஓரியோ 46.3 கிராம்! லேஸ் சிப்ஸ் பாக்கெட்டுகள் பொதுவாகவே 28, 52, 73 கிராம் என்பதான எடைகளில்தான் இருக்கின்றன! ஒரு கிலோ, அரை கிலோ அல்லது 100 கிராம் என்பதான எடைகளிலேயே பொருட்களை வாங்கிப் பழகியிருக்கிற நமக்கு, இது வினோதமாக இருக்கும்!

இவ்வாறு வினோதமான அளவுகளில் விற்பனை செய்வது என்பது, மிகப்பெரிய சந்தை ஆய்வுக்குப்பின் உருவாகிறது. பிரைஸ் பேக்கேஜிங் ஆர்க்கிடெக்சர்(PPA) என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, ஒரு பொருளை என்ன விலைவரை வாங்க மக்கள் தயாராக இருப்பார்கள் என்று ஆய்வு செய்து, தருமி எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்துக்கொள்ளுங்கள் என்ற சொன்ன மாதிரி, அந்த விலைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு (குறைத்துத்)தருவது! 10 ரூபாய்க்குக் கிடைப்பதால்தானே லேஸ் சிப்ஸ் பாக்கெட்டுக்களை வாங்குகிறார்கள்? 28 கிராம் பத்து ரூபாய் என்பதற்கு பதிலாக, 100 கிராம்தான் விற்போம், விலை ரூ.35.75 என்றால் இவ்வளவு விற்பனையாகுமா? மார்க்கெட்டிங் சாமி மார்க்கெட்டிங், பாக்கெட்டிங் சாமி பாக்கெட்டிங் என்று சகுனி படத்தில் சொன்னது எவ்வளவு பெரிய தத்துவம் என்று இப்போது புரிகிறதா? விலை மட்டும் இந்த அளவை முடிவு செய்வதில்லை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், ஒரு நொறுக்குத்தீனி பாக்கெட்டில் எவ்வளவு கலோரிகள் இருக்கலாம், எவ்வளவு கொழுப்பு இருக்கலாம் என்பதற்கெல்லாம் வரம்பு நிர்ணயிக்கப்படுவதால், அந்த வரம்புக்காகவும், இப்படியான பின்ன அளவுகளில் பாக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளைப் பொறுத்தவரை, மக்களின் வாங்கும் சக்தி என்பதுதான் முக்கியமான தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது. அதனால்தான் ஒரு காலகட்டம்வரை, பிரிமியம் பிஸ்கெட்டாக இருந்த குட்-டே போன்றவைகூட இன்று 5 ரூபாய்க்குக் கிடைக்கின்றன. இதைத்தாண்டி, பயணம் செய்யும்போது வாங்கிப் பிரித்தால், அப்போதே தின்று தீர்த்துவிடும் அளவு என்பது போன்ற பல்வேறு கூறுகள் இந்த ஆய்வுகளில் கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஆனால், நாம் பேச வந்தது இந்த மார்க்கெட்டிங் தொழில்நுட்பத்தைப் பற்றி அல்ல! விலைவாசி உயர்வில் அது ஆற்றும் பங்களிப்பைப் பற்றித்தான்! இன்ஃப்ளேஷன், டீஃப்ளேஷன், ஸ்டேக்ஃப்ளேஷன், ஹைப்பர் இன்ஃப்ளேஷன் ஆகியவற்றைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இவற்றுக்கு அப்பாற்பட்டுள்ள ஷ்ரிங்க்ஃப்ளேஷன் பற்றித்தான் இப்போது பேச வேண்டியுள்ளது!

விலைவாசி உயர்ந்து, நாணய மதிப்பு சரிவதை இன்ஃப்ளேஷன்(பணவீக்கம்) என்றும், இது தலைகீழாக நடந்து விலைவாசி குறைந்தால் டீஃப்ளேஷன் என்றும், விலைவாசி அதிவேகமாக உயர்வதை ஹைப்பர் இன்ஃப்ளேஷன் என்றும், பொருளாதாரத்தில் வளர்ச்சியின்றித் தேக்க நிலையில் இருந்தும் விலைவாசி மட்டும் உயர்வதை ஸ்டேக்ஃப்ளேஷன் என்றும் குறிப்பிடுகிறார்கள். சரி... அது என்ன ஷ்ரிங்க்ஃப்ளேஷன்? முதலில் சொன்ன 64 கிராம் ட்ரீட் பிஸ்கெட் பாக்கெட்டின் விலை ரூ.30. சத்தமில்லாமல்(எந்த அறிவிப்பும் இல்லாமல்!) அந்த பாக்கெட்டை 57 கிராமாகக் குறைத்து, அதே 30 ரூபாய்க்கு விற்றால் நமக்குத் தெரியவா போகிறது? ஆனால், அவ்வாறு செய்தால் சற்றேறத்தாழ 11% அளவு பொருள் (பிஸ்கெட்) குறைக்கப்பட்டு, அதே விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது, வெளியில் தெரியாமல் 11% விலைவாசி உயர்ந்துவிடுகிறது! இதைத்தான் ஷ்ரிங்க்ஃப்ளேஷன் என்று குறிப்பிடுகிறார்கள்!

நமக்கு வலிக்காமல், நம் இரத்தத்தை அட்டை உறிஞ்சிவிடுமே, அதைப்போல! அப்படித்தான் இன்றைய விலை உயர்வுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இனி ஒவ்வொரு முறை இப்படி பேக்கேஜிங் செய்யப்பட்ட பொருட்களை வாங்கும்போதும், எடையையும் விலையையும் பாருங்கள், எவ்வளவு ஷ்ரிங்க்ஃப்ளேஷனுக்கு நடுவில் நாம் வாழ்கிறோம் என்பது புரியும்! பிரிட்டானியா, காட்பரி, பெப்சிகோ(லேஸ் சிப்ஸ்) போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள், தெரிந்தே பயன்படுத்துகிற நுட்பமான இந்த ஷ்ரிங்க்ஃப்ளேஷன் என்பதை இன்றைய ஒன்றிய அரசும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதுதான் இந்தக் கட்டுரையின் கிளைமேக்ஸ்!

ஆம்! நாள்தோறும் விலை உயர்ந்துகொண்டே இருப்பதால், சில்லறைப் பிரச்சனையைத் தவிர்க்க 100 ரூபாய்க்குப் பெட்ரோல் என்று நிரப்புகிறோம். அதனால், பெட்ரோலின் அன்றைய விலை என்ன என்பது கவனம் பெறுவதில்லை! விலை உயர்வு உடனடியாக வலியை ஏற்படுத்தாமல், முன்பைவிட அடிக்கடி பெட்ரோல் நிரப்புகிறோமே என்று சிந்திக்கும்போதுதான் வலிக்கிறது! ஒன்றிய அரசும் அதற்காகவே 16 காசு, 74 காசு என்று கொஞ்சம் கொஞ்சமாக, நாள்தோறும் உயர்த்தி, அட்டையாய் நம்மை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது! ஷ்ரிங்க்ஃப்ளேஷனைக் கண்டுபிடித்த கார்ப்பரேட் ஆய்வாளர்கள்கூட, அதற்குரிய பாக்கெட்டிங், அது, இது என்று ஏராளமானவற்றைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அதற்கெல்லாம் செலவழிக்காமல், நம்மையே 100 ரூபாய்க்குப் பெட்ரோல் போடவைத்து, ஓயாமல் விலையையும் உயர்த்திக்கொண்டிருக்கிற பாஜக அரசுதான், உலகிலேயே மிகச் சாதுர்யமாக ஷ்ரிங்க்ஃப்ளேஷனைப் பயன்படுத்திக்கொண்ட ‘நிறுவனம்’ என்றால் மிகையல்ல தானே?