கோதமங்கலம், அக்.11 - அரிய வகை தவளைகளின் சொர்க்கமாகிய தட்டேக்காடு வனப்பகுதியில் புதிய விருந்தினர் வந்துள்ளார். சலீம் அலி பறவைகள் சரணாலயத்திலிருந்து குளத்திலும் தேங்கி நிற்கும் தண்ணீரிலும் காணப்படும் குதிக்கும் தவளையைப் போன்ற தோற்றம் கொண்டவை இவை. கோழிக்கோடு விலங்கியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர்.கே.பி.தினேஷ், டாக்டர்.கவுஷிக் தவுத்தி தலைமையிலான ஒரு ஆய்வுக் குழுவால் இவை அடையாளம் காணப்பட்டன. இதன் மூலம், பறவைகள் சரணாலய ஆராய்ச்சி மையம் தட்டேக்காடு பகுதியில் மேலும் ஆய்வு நடத்த தயாராகி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பள்ளத் தாக்குகளின் நன்னீர் ஆதாரங்களில் அரிய தவளைகள் காணப்படுகின்றன. மாநிலத்தின் அதிகாரப்பூர்வமான பாதாளத் தவளையும் தட்டேக்காடின் பங்களிப்பாகும். அவை 1994 இல் கண்டுபிடிக்கப்பட்டன. இது பலூன் தவளை என்றும் அழைக்கப்படுகிறது. நகங்கள் முதல் உள்ளங்கைகள் வரையிலான மாறுபட்ட 28 வகையான தவளைகளை அடையாளம் கண்டுள்ளதாக பிரபல வன உயிரியல் ஆய்வாளர் ஆர்.சுகுதன் கூறினார். உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பல்லுயிர் பெருக்கத்தின் கிடங்காக தட்டேக்காடு பறவைகள் சரணாலயம் உள்ளது. மிகவும் அரிதான, அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாக தட்டேக்காடு உள்ளது. இப்பகுதியில், சுமார் 5,000 பூக்கும் தாவரங்கள், 138 பாலூட்டிகள், 34 வகையான மீன்கள், 22 வகையான நீர்வாழ் இனங்கள், 43 வகையான ஊர்வன, 320 வகையான பறவைகள்- புலம்பெயர்ந்த பறவைகள் உள்ளன. புதிய வகை தவளைகள் குறித்து மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பீச்சியில் உள்ள கேரள வன ஆராய்ச்சி நிறுவனம் (KFRI) மற்றும் தட்டேக்காடு பறவைகள் ஆராய்ச்சி மையம் ஆகியவை முடிவு செய்துள்ளன.