புதுதில்லி,செப்.14- உலகின் மிக உயரமான ரயில் பாலம் என அறியப்படும் செனாப் பாலத்தில் வெண்மேகங்கள் சூழ்ந்த பிரமிப்பூட்டும் புகைப்படங்களை இந்திய ரயில்வே வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பின் முக்கிய மைல்கல்லாக இந்த பாலம் அமைந்துள்ளது. செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் 1315 மீட்டர் நீளம் கொண்டது. செனாப் பாலம் ஆற்றுப் படுகையின் மட்டத்திலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பாலத்தின் கட்டுமான பணிக்கு டெக்லா எனும் தொழில்நுட்பத்தை ரயில்வே பயன்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை இந்தப் பாலத்தின் ஸ்டீல் தாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் வலைத்தளத்தில் நான்கு படங்களை பகிர்ந்துள்ளது இந்திய ரயில்வே. அவை வெண்மேகங்கள் சூழ்ந்து அழகாக காட்சியளிக்கிறது.