நெடுங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி
கிருஷ்ணகிரி, மே10- கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த மார்ச் 2025 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஊத்தங்கரை வட்டம், நெடுங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 131 மாணவர்களும் பேரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பெற்ற மாணவி ந. பவித்ரா 542 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ந. தீபிகா 536 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் ப. நமீதா 527 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். பள்ளிக்கு 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று தந்த மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் சி.காளியப்பன், இருபால் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பள்ளி வாகனங்கள் கூட்டு ஆய்வு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
கடலூர், மே 10- கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள பேருந்துகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஒரே இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேருந்தில் சிசிடிவி கேமரா இயக்கம், முதலுதவி பெட்டி குறித்து ஓட்டுரிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, வானங்களுக்கு முறையாக தகுதிச்சான்று பெறப்பட்டுள்ளதா, விபத்து நிகழ்ந்தால் மாணவர்கள் அவசரமாக வெளியேற அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவது தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்கிறதா, ஓட்டுநருக்கு கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா, கதவுகளுக்கு பூட்டு உள்ளதா, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, வாகனங்களில் விபத்து நேரங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என தீயணைப்பு துறையினர் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். ஆய்வு நடைபெறும் இடத்தில் ஓட்டுநர்களுக்கும் இலவச கண் பரிசோதனை நடைபெற்றது. இந்த ஆய்வில் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து 98 பள்ளிகளில் 388 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், முதற்கட்டமாக 201வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, ரவிச்சந்திரன், பிரான்சிஸ் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு ஆவணங்களில் தில்லு முல்லு பொது சாலை ஆக்கிரமிப்பு
திருவண்ணாமலை, மே 10- திருவண்ணாமலை கிரிவலப் பாதை அருகே அரசு ஆவணங்களில் தில்லுமுல்லு செய்து பொது சாலை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட பதிவாளரிடம் பொது மக்கள் புகார் மனு அளித்தனர். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிரிவலப் பாதை அருகே குபேரன் நகர் வடக்கு பகுதியில் பொது மக்கள் பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். பொதுமக்கள் வசிக்கும் அந்த குடியிருப்புக்குச் செல்லும் 30 அடி தார் சாலை அமைந்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலர், அந்த சாலை தங்களுக்கு சொந்தமானது என ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையை சீரழித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள், அரசு ஆவணங்களை சரிபார்த்த போது, பத்திரபதிவுத்துறை மற்றும் ஊர் நகரமைப்பு அரசு ஆவணங்களில் தில்லுமுல்லு செய்து, போலியான ஆவணங்களை தயாரித்து, பத்திர பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. எனவே போலியான பத்திர ஆவணங்களை தயாரித்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என திருவண்ணா மலை மாவட்ட பதிவாளரிடம் அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அன்று புகார் மனு அளித்தனர்.
கீர்த்தி வர்மாவுக்கு ஆட்சியர் பாராட்டு
கிருஷ்ணகிரி, மே 10- கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் கீர்த்திவர்மன். சிறு வயதில் மின்சாரம் தாக்கி தனது இரண்டு கைகளும் இழந்துள்ளார். தற்போது நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரிடம் மாணவர் கீர்த்தி வர்மா தனக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.இதையடுத்து, சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திருக்கிறார். இந்த நிலையில், அதிக மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர் கீர்த்தி வர்மாவை சந்தித்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் பாராட்டு தெரிவித்தார். பெற்றோர் உடனிருந்தனர்.