tamilnadu

img

வேலூரில் ஓட்டுக்கு ரூ.500; பணப்பட்டுவாடா செய்வது எப்படி? வைரலாகும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உரையாடல் வீடியோ

வேலூர், ஏப்.17-வேலூரில் ஓட்டுக்கு ரூ.500 கொடுப்பது குறித்தும் பணப் பட்டுவாடா செய்வது பற்றியும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ, தனது ஆதரவாளர்களுடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் களம் கண்டார்.இதற்கிடையே துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவ ர்களின் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதுதொடர்பாக அனுப்பிய பரிந்துரைகளை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்நிலையில் வேலூர் தொகுதியில் பணப் பட்டுவாடா செய்வது எப்படி என்று கூட்டணிக் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோ.வி.சம்பத் உரையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், “10 பேர் போங்க, ரெண்டு அல்லது மூணு பேர் கண்காணிங்க. ஒரு ஆள் நில்லுங்க. அவர் போன் பண்ணி ஆள் வராங்க, வண்டி வருதுன்னு தகவல் சொல்லுங்க. நீங்க ஒரே டீமா போய் 10 பேரு (பாமக, அதிமுக) போய் கொடுங்க. யாரும் அந்தப் பகுதியில ஏசிஎஸ் ஆளு இல்லாம கொடுக்கக் கூடாது. அதே மாதிரி காசை ஒரே இடத்துல வைக்காதீங்க. ஒரு ஆள் அனுப்பறேன். அங்கே போய் பணத்தை எண்ணிக்குங்க. ஏசிஎஸ் ஆள் வந்தவுடன் பகல்ல கொடுக்காதீங்க; நைட் கொடுத்துக்கலாம்.பணத்தை தனித்தனியா எண்ணி வச்சுக்கோங்க. ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய். ஏசிஎஸ்ஸூக்கு (ஏ.சி.சண்முகம்) ஓட்டு போடுபவர்களுக்கு பணம் சேரணும்’’ என்று கோ.வி.சம்பத்தும் மற்றவர்களும் உரையாடுகின்றனர்.வேலூரில் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலையே ரத்து செய்துள்ள நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

;