வார்டு பாய் பணிக்கு தமிழில் தேர்வு: முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி,செப்.4-வார்டு பாய் பணிக்கு தமிழில்தான் தேர்வு நடத்தப்படும் சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், கீழ்நிலை ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அங்கு மருத்துவ சேவை பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் அங்கு வார்டு பாய் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதில் அவர்களுக்கு மாத ஊதியம் ரூ. 8 ஆயிரம் எனவும், எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த எழுத்துத் தேர்வு ஆங்கிலத்தில் நடத்தவுள்ளதாக தெரிகின்றது. எனவே அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் நாராயணசாமி வார்டு பாய் பணிக்கு ஆங்கிலத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறுவதை ஏற்க முடியாது. எனவே தமிழில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாத 11,052 பேர் மீது வழக்கு
வேலூர், செப். 4-வேலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய மற்றும் பின்னால் அமர்ந்திருந்து சென்ற 11 ஆயிரத்து 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோட்டார்சைக்கிள் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் மீதும், போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது. வேலூர் மாவட்டத்தில் இந்த நடைமுறைகள் கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் ஹெல்மட் அணியாமல் அமர்ந்திருந்தவர்கள், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்கிறார்கள். 5 நாட்களில் ஹெல்மெட் அணியாத 11 ஆயிரத்து 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ரூ. 11 லட்சத்து 5 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.