வேலூர், மே 25-தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அணைகள், ஏரிகள் உட்பட நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் மாநிலம் முழுவதும் குடிநீருக்காக காலிக்கூடங்களுடன் பொதுமக்கள் தண்ணீர் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் மாநகராட்சி சைதாப்பேட்டையில் அண்ணா சாஸ்திரி தெரு,கானாறு குடிபா தெரு, சுருட்டுக்கார தெரு ஆகியபகுதிகளில் கடந்த 2 வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே போன்று, வேலூர்மாநகராட்சி 43-ஆவது வார்டுக்கு உள்பட்ட விருப்பாட்சிபுரத்தில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ரத்தினகவுண்டர் தெரு, கே.கே.தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக குடிநீர்விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விருப்பாட்சிபுரம் பிரதான சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பாகாயம் - காட்பாடி, வேலூரில் இருந்து கள்ளக்குறிச்சி சென்றஇரு அரசுப் பேருந்துகளையும் அவர்கள் சிறைபிடித்தனர். இதற்கிடையே, அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.கே.வி. குப்பத்தை அடுத்த மாச்சனூர் ஊராட்சிக்கு உள்பட்ட உடையார்பாளையம், வண்ணார்பேட்டை, ஆற்காடு அடுத்த அருங்குன்றம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் கேட்டுபொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அருங்குன்றம் ஊராட்சியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களது குடிநீர் தேவைக்காக பைப் லைன் மற்றும் போர்வெல்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக 20க்கும் மேற்பட்ட போர்வெல்களில் பழுது ஏற்பட்டதால் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், தண்ணீரைஅப்பகுதி மக்கள் நீண்டதூரம் சென்று பிடித்து வந்து பயன்படுத்துகிறார்கள்.இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் உட்படபல்வேறு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய்களையும், ஏரி நீர்வரத்துக் கால்வாய்களையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைத்து போர்வெல்களை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதே போன்று திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல பகுதியில் குடி நீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.