tamilnadu

img

ஏப்.21 ல் அனைத்து தொழிலாளர்களும் கண்டனம் முழங்க சிஐடியு வேண்டுகோள்

விருதுநகர்:
அனைத்து தொழிலாளர்களுக்கும் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். நிவராணத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்  என்றும் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்தும் ஏப்ரல் 21 அன்று காலை வீடுகளில் கண்டனம் முழங்க வேண்டுமென சிஐடியு வலிறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :
நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா நோய் தொற்றால் தமிழகத்தில் இதுவரை 1,200 க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.   இந்த ஊரடங்கால் விருதுநகர் மாவட்டத்தில்  பல லட்சம் முறைசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பட்டாசு - தீப்பெட்டி, அச்சு, பஞ்சாலை, விசைத்தறி, கைத்தறி, தையல், சாலையோர வியாபாரம் ,ஓட்டுனர்கள் என பலதரப்பட்ட தொழிலாளர்களின் வாழக்கை நிலை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.  

 எனவே தமிழக அரசு, இத்தொழிலாளர்களுக்கு ரூ 10,000/- வீதம் நிவாரணம்  வழங்க வேண்டும் என்றும்,  ஊரடங்கு காலம் முடியும்வரை ரேசன் மூலம் இலவச உணவுப்பொருள்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும்  சிஐடியு உள்பட பல சங்கங்கள்அரசிடம் கோரிக்கை வைத்தன. ஆனால், தமிழக அரசோ,  ஒவ்வொரு தொழிலாளிக்கும் நலவாரியம் மூலம் முதல் கட்டமாக ரூ 1,000- ம் தற்போது  இரண்டாம் கட்டமாக ரூ 1,000- மற்றும்  அரிசி, பருப்பு , சமையல் எண்ணெய் என வழங்கப்படும் என  அறிவித்துள்ளது.   அறிவித்த தொகை முழுமையாக தொழிலாளர்களிடம்  போய்ச் சேரவில்லை.    விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானம் உள்ளிட்ட நலவாரியத்தில் 2,27,000 பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை 9,000 பேர்களுக்கு மட்டுமே பணம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, நலவாரியத்தில் பதிவு செய்தால்தான்  நிவாரணம் என்ற நிபந்தனையை தவிர்த்து அனைத்து வேலையிழந்த தொழிலாளர்களுக்கும்  நிவாரணம் ரூ 10,000  வழங்க வேண்டும்.

தொழிலாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இதுவரை எந்தவித உதவியும் செய்யாத நிலையில் எட்டு மணிநேர வேலைநேரத்தை 12 மணி நேரமாக  ஆக்கி கூடுதல் வேலை நேரத்தை ஊதியம் இன்றி அறிவித்துள்ளது. இதை சிஐடியு வன்மையாக கண்டிப்பதோடு,     வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி  காலை 10.10 மணிக்கு வீடுகளில் கண்டன முழங்க வேண்டும் என  அறிவித்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் சிஐடியு சங்கத்தில் 20,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே அன்றைய தினம், கிராமங்கள், நகர் பகுதிகளில் 10,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டன முழக்கத்தை காலை 10.10 மணிக்கு எழுப்புவார்கள் என தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;