tamilnadu

img

திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி ‘மிஸ் கூவாகமாக’ நபீஷா தேர்வு

விழுப்புரம், ஏப். 17-விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் மிஸ் கூவாகமாக தருமபுரி நபீஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது.இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் வந்து குவிந்தனர். இவர் களை மகிழ்விக்கும் வகையில் விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ஆஞ்சநேயா திருமண மண்டபத்தில் நடன நிகழ்ச்சி மற்றும் ‘மிஸ் கூவாகம்’ 2019 அழகிப்போட்டி நடைபெற்றது.விழுப்புரம் டிஎஸ்பி திருமால் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவி ராதாம்மாள் வரவேற்றார்.


தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 72 தலைவிகள் முன்னிலை வகித்தனர்.முதல்கட்டமாக திருநங்கைகளுக்கான நடனப்போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பாடலுக்கேற்ப நடனமாடி அசத்தினர்.அதனைத் தொடர்ந்து ‘மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி நடந்தது. இதில் சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 34 திருநங்கைகள் கலந்துகொண்டனர். இதன் இறுதிச் சுற்றில் பங்கேற்ற 5 பேரிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வு, பொது அறிவுத்திறன் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் தருமபுரியை சேர்ந்த நபீஷா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். கோவை மடோனா 2-வது இடமும், ஈரோடு மாவட் டத்தை சேர்ந்த ருத்ரா 3வது இடத்தையும் பிடித்தனர். இதேபோல் நடனப்போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெய்ஆகாஷ், ஆர்.கே.சுரேஷ், ஆரி, நாட்டுப்புற பாடகர்கள் செந்தில், ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஒப்பாரி வைத்த திருநங்கைகள்...

இதனையடுத்து, திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம், மும்பை, கல்கத்தா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டனர். புதனன்று(ஏப்.17) அரவான் களப்பலி இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து திருநங்கைகள் பூசாரியின் கையால் தாலி அறுத்து எறிந்தனர். பின்னர், சோகத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.


;