tamilnadu

img

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் வங்கி ஏடிஎம் கார்டு பெற்றுத்தந்த போராட்டம்....

பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் தனது போராட்டத்தால் சமூக அக்கறையற்ற சிலரின் கண்களை திறந்துவிட்டுள்ளார். 

திருத்துறைப்பூண்டி வட்டம், பாண்டிக்கோட்டகம் என்ற ஊரில் வசித்து வரும் எல்.சங்கரன் - சுந்தரிதம்பதியரின் இளைய மகன் அசோக் பாலா என்கிற ஐயப்பன் (33). திருமணம் ஆகாத பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞன். இவரது தந்தையார் ஊரில் சிறிய பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பம். ஆறாம் வகுப்பு வரை படித்துள்ளார். பள்ளி பருவத்தில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது விளையாட்டு நேரத்தில் சக மாணவனின் கைவிரல் நகம் பட்டு இடது கண்ணில் கருவிழி பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுள் ளார். அப்போது தான் பிறவிலேயே அவரது வலது கண்ணிலும் பார்வைகுறைபாடு உள்ளது தெரியவந்துள் ளது. 

அறுவை சிகிச்சை
இதற்காக மூன்றுமுறை வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட் டுள்ளது. ஆயினும் பார்வை மெல்லமெல்ல குறையத்தொடங்க முழுமையாக பார்வைத்திறன் அற்றவராக மாறிஇருக்கிறார் ஐயப்பன். இந்த நிலையில் மனம் தளராத இவர் மத்திய அரசின் என்ஐவிஎச்- என்ற சான்றிதழ்வகுப்பில் மூன்று மாதம் சேர்ந்துபடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதுபார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி ஆகும். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று357 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். அரசு துறைகளில் பணியாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுத வேண்டும்என்ற முனைப்புடன் உள்ளார். 

வங்கி நிர்வாகத்தால் நேர்ந்த அவமானம்
இதனிடையே அரசின் உதவித் தொகை பெறுவதற்காக 2013 ஆம்ஆண்டு திருத்துறைப்பூண்டி இந்தியன்ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி பராமரித்து வந்துள்ளார். கடந்த 13.07.2020 அன்று தனது நெருங்கிய உறவினர் ஒருவருடன் வங்கி மேலாளரைச் சந்தித்து ஏடிஎம் கார்டு வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்தமேலாளர் “ப்ளைண்டுக்கு ஏடிஎம் கார்டா?” என கேட்டதுடன் ஐயப்பனின் மனம் புண்படும்படி நடந்துள் ளார். அதனால் வேதனையடைந்த ஐயப்பன் சமூக வலைதளத்தில் தனக்குநேர்ந்த அவமானம் குறித்தும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளானது குறித்தும் குரல் பதிவிட்டு வெளியிட் டுள்ளார். 

மாற்றுத்திறனாளி சங்கத்தின் தலையீடு
இது சமூக வலைதளத்தில் வேகமாக பரவ தமிழ்நாடு அனைத்து வகைமாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங் கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜனின் கவனத்திற்கும் சென்றுள்ளது. உடனடியாக அவர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு அதனை அனுப்பியுள்ளார். மேலும் திருவாரூர் மாவட்ட தலைவர் டி.சந்திராவை தொடர்பு கொண்டு இப்பிரச்சனையில் தலையிட கேட்டுக் கொண்டுள்ளார். அதன் காரணமாக ஜூலை 20 அன்று வங்கி அலுவலகம் முன்பாக சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. 

2005 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவின்படி பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கலாம் என்ற விதிமுறை ஆர்ப்பாட்டத்தின் வாயிலாகவங்கி நிர்வாகத்திற்கு எடுத்துரைக்கப் பட்டது. இந்த போராட்டத்தின் மூலமாக வங்கி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. கடந்த ஜூலை 24 அன்று மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த ஐயப்பனை வங்கிக் கிளைக்கு நேரில் வரவழைத்து நடந்தசம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டது. மேலும் விரைவில்ஏடிஎம் கார்டு வரவழைத்து தருவதாகவும், அவரது முன்னேற்றத்திற்கு எல்லாவகையிலும் உதவி செய்வதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்டத்தின் மூலமாக வங்கி அதிகாரிகளின் மனக்கண்களை திறந்துஅவர்களின் மனசாட்சியை கேள்வி கேட்டதன் மூலமாக இவரைப் போன்றஏராளமான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த இளைஞனுக்குள் ஒரு கவிஞனும் இருக்கிறார். “நிறம் தெரியாதவர்கள்; பார்வையற்றவர்கள் அல்ல,அறம் தெரியாதவர்களே பார்வையற்றவர்கள்” என்பது அவரது கவித்திறனிற்கு ஒருஎடுத்துக்காட்டு. போர்க்குணம் கொண்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி அசோக்பாலா என்ற ஐயப்பனுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளபதிவை கவனித்து பொறுப்புடன் ஐயப்பனுக்கு உதவிக்கரம் நீட்டியஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினருக்கு சமூகஆர்வலர்கள் மற்றும் மக்கள் பாராட் டுக்களை தெரிவித்துள்ளனர்.    

===எஸ்.நவமணி===
 

;