மேட்டூர், செப்.22- மேட்டூர் அணையின் நீர் மட்டம், 15 நாட்களுக்கு பிறகு 120 அடியிலிருந்து சற்று குறைந்துள்ளது. கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது.அங்குள்ள அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 7ஆம் தேதி அணை நிரம்பியது. இத னால் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினா டிக்கு 75 ஆயிரம் கன அடி வரை நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. இதனால் 15 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் மொத்த உயரமான 120 அடியிலிருந்து 119.94 அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து ஞாயிறன்று காலை வினாடிக்கு 7 ஆயிரத்து 812 கன அடியாக குறைந்துள்ளது. அணை யிலிருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 93.37 டி.எம்.சி.யாக உள்ளது.