tamilnadu

img

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி? கொரோனா தொற்று பரவலை சாக்காக வைத்து புதிய சூழ்ச்சி

மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை ஆளுநர் பி.எஸ். கோஷ்யாரி உதவியுடன் கலைக்கும் முயற்சியில் பாஜக இருப்பதாக சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகதனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. எனினும் ஆளுநர் கோஷ்யாரி உதவியுடன் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் முதல்வர் ஆனார். பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், அவமானப்பட்டு ராஜினாமா செய்தார்.தற்போது சிவசேனா, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தவ் தாக்கரே முதல்வராக இருக்கிறார்.இந்நிலையில், ஆளும் தரப்பைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், எதிர்க்கட்சியான பாஜக-வின் முக்கியத் தலைவர் நாராயண் ரானே ஆகியோரை ஆளுநர் கோஷ்யாரி, திங்களன்று நேரில் அழைத்துப் பேசியிருப்பது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா தொற்றுப் பரவல் 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையைக் கடந்து விட்ட நிலையில், “முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அரசாங்கத்தை நடத்தும் திறன் இல்லை. மாநிலத்திற்கு வருவாயை எவ்வாறு திரட்டுவது என்பது குறித்தும் அவரிடம் திட்டம் எதுவும்இல்லை” என்று பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டுக் களை வைத்து வருகிறது.உத்தவ் தாக்கரே அரசைக் கண்டித்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று மாநிலம் முழுதும் கறுப்புக் கொடி போராட்டமும் நடத்தியது.

இதையடுத்து, கொரோனாவைக் காட்டி, மகாராஷ்டிராவில் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர்ஆட்சியை அமல்படுத்துவது; இந்த கால அவகாசத்திற்குள் எம்எல்ஏ-க்களை வளைத்து மீண்டும்ஆட்சிக்கு வருவது என்று பாஜக திட்டம் திட்டியிருப்பதாக யூகங்கள் வெளியாகின.முன்னதாக, மாநில நிர்வாகத்தின் செயல்பாட்டில் ஆளுநர் மூலமாக மத்திய பாஜக அரசு தலையீடு செய்ய முயல்வதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் குற்றச்சாட்டுக்களை வைத்திருந்தார். இதற்கிடையேதான் சரத்பவார், நாராயண் ரானே ஆகிய இருவரையுமே ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சந்தித்தார்.“இது ஒரு வழக்கமான சந்திப்பு. இது எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் பிரச்சனை பற்றியதும் அல்ல” என்று சரத் பவார் தெரிவித்தாலும், “எல்லாவகையிலும் தோல்வியுற்ற மகாராஷ்டிர மாநில அரசில் மத்திய அரசு தலையிட வேண்டும், மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என்று தான் வலியுறுத்தியதாக பாஜக தலைவர் நாரயண் ரானே கூறியிருக்கிறார்.

இந்த பின்னணியிலேயே, ஆளுநர் உதவியுடன் மகாராஷ்டிர சிவசேனா அரசை கலைப்பதே பாஜக மற்றும் அதன் தலைவர் தேவேந்திர பட்னாவிஸின் ஒரே திட்டம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.மகாராஷ்டிராவில் கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறுபவர்கள், உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் அரசாங்கங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய தோல்வி அடைந்திருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது; பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இந்த பொறுப்பில்இருந்து தப்ப முடியாது என்றும் கூறியுள்ளார்.

;