‘போராட்டங்களின் காவியம்’
2018ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற சிபிஎம் 22ஆவது அகில இந்திய மாநாட்டில் மகத்தான தலைவர்கள் வி.எஸ்.அச்சுதானந்தன், என்.சங்கரய்யா
திருவனந்தபுரம், ஜூலை 21 - ‘வி.எஸ்.’ என்ற இரண்டு எழுத்துக்கள் மூலம் கேரள மக்களின் மனத்தில் புரட்சிகர ஒளியாகப் பதிந்த உன்னதமான தலைவர் - தோழர் அச்சுதானந்தன் மறைந்தார். 102 வயதைக் கடந்த வி.எஸ். அச்சு தானந்தன், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வி.ஏ. அருண்குமாரின் வீட்டில் இருந்தபடி நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரண மாக கடந்த ஜூன் 23 அன்று திருவனந்த புரத்தில் உள்ள எஸ்.யு.டி. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்களன்று பிற்பகல் 3.20 மணியளவில் வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் - கே. வசுமதி தம்பதிக்கு வி.ஏ. அருண்குமார் என்ற மகனும், டாக்டர் வி. ஆஷா என்ற மகளும் உள்ளனர். கே. வசுமதி முதுமை காரணமாக முழு ஓய்வில் உள்ளார். தோழர் வி.எஸ். 2006 - 11 கால கட்டத்தில் கேரள முதல்வராக ஒரு முறையும், எதிர்க்கட்சித் தலைவராக மூன்று முறையும் பதவி வகித்தவர். ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி யாற்றினார். பல மக்கள் போராட்டங் களுக்குத் தலைமை தாங்கிய அவர், 1980 முதல் 1991 வரை சிபிஎம் மாநிலச் செயலாள ராகப் பணியாற்றினார். தற்போது சிபிஎம் மாநி லக் குழுவில் அழைப்பாளராக உள்ளார். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப் புரா வெந்தலத்தரா வீட்டில் அய்யன் சங்கரன் மற்றும் அக்கம்மா என்ற கார்த்தியாயினிக்கு இரண்டாவது மகனாக 1923 அக்டோபர் 20-ஆம் தேதி தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் பிறந்தார். புன்னப்புரா பரவூர் அரசுப் பள்ளி யிலும், கலர்கோடு பள்ளியிலும் கல்வி பயின்றார். வி.எஸ்.சின் குழந்தைப் பருவம் வறுமையும் துயரமும் நிறைந்தது. நான்கு வயதில், பெரியம்மை நோயால் தாயை இழந்தார். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே அவரது தந்தையும் இறந்தார். பின்னர் படிப்பை விட்டுவிட்டு, தனது மூத்த சகோதரரின் துணிக்கடையில் உதவியாளராகப் பணியாற்றினார். பின்னர், ஆலப்புழா ஆஸ்பின்வால் கயிறு நிறு வனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி னார். அங்கு மூன்று ஆண்டுகள் பணியாற்றி னார். 17 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். வி.எஸ்ஸின் நிறுவனத் திறன்களைக் கண்டறிந்து, குட்டநாட்டின் விவசாயத் தொழி லாளர்கள் மத்தியில் கட்சியை வளர்க்க வி.எஸ்.ஸை ஊக்கப்படுத்தியவர் பி. கிருஷ்ண பிள்ளை. புன்னப்புரா - வயலார் போராட்டத்தின் போதும், பின்னர் அவசர நிலையின் போதும் அவர் கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் கொடூரமாக சித்ரவதை செய்யப் பட்டார். 1943-ஆம் ஆண்டு, கோழிக் கோட்டில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஆலப்புழாவின் பிரதிநிதியாகப் பங்கேற்றார். புன்னப் புரா - வயலார் போராட்டத்தின் போது, கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் அவர் தலைமறைவானார். கோட்ட யத்தில் உள்ள பூஞ்சாரில் மறைந்தி ருந்தபோது கைது செய்யப்பட்டார். காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்து விட்டதாகக் கருதி வி.எஸ்.ஸை காட்டிற்குக் கொண்டு சென்றனர். பின்னர் உயி ருடன் இருப்பதை தெரிந்து கோட்ட யத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையை விட்டு வெளி யேறிய பிறகு, வி.எஸ். மக்கள் போராட்டங்களில் முன்னணியில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். ஊழல் மற்றும் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் சமரசமின்றி நின்றார். 1956 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலக் குழு உறுப் பினராகவும், 1957 ஆம் ஆண்டு ஆலப்புழா மாவட்டச் செயலாள ராகவும் ஆனார். 1958 ஆம் ஆண்டு தேசியக் குழு உறுப்பினரானார். 1964-ஆம் ஆண்டு ஒன்றுபட்ட கட்சி யிலிருந்து வெளியேறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தேசியக் குழு உறுப்பினர்களில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் 7 பேர். அவர்களில் வி.எஸ். அச்சு தானந்தனும் ஒருவராவார். 1964-ஆம் ஆண்டு கொல்கத்தா வில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் வி.எஸ். மத்தியக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985-ஆம் ஆண்டு அவர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரானார். 2016-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எல்.டி.எப் அரசாங்கத்தில் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக வி.எஸ். அச்சுதானந்தன் நியமிக்கப் பட்டிருந்தார்.