‘பாஜகவின் கையில் சிக்கியது அதிமுக!’
திமுகவில் இணைந்த அன்வர் ராஜா பேட்டி
சென்னை, ஜூலை 21 - முன்னாள் எம்.பி.,யும், அதிமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான அன்வர் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தார். பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததால், அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கட்கிழமை (ஜூலை 21) சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த அன்வர் ராஜா, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து அன்வர் ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பேரறிஞர் அண்ணா தலைமையில் கருத்தியல் ரீதியாக வளர்ந்தவர்கள் நாங்கள். பாஜகவின் கையில் அதிமுக சிக்கியிருக்கிறது. அதிமுக தனது கொள்கைகளுக்கு மாறாக செயல்படுகிறது. அதிமுகவை அழிப்பதுதான் பாஜகவின் நோக்கம்” என்று கூறினார். இந்த செய்தி, ஊடகங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே அன்வர் ராஜாவை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டார். எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்று வரை அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய அன்வர் ராஜா, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது