நாமக்கல், செப். 20- தமிழ்நாட்டில் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில், ஆதிவாசிகளின் உரிமைகளுக்கான அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றுள்ள பிருந்தா காரத், புதனன்று மாநாட்டு அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வதற்கு மோடி அரசுக்கு 9 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. பாஜக, கடந்த 2014 தேர்தலுக்கு முன்பே இந்த மசோதா கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மோடி தலைமையிலான பாஜக அரசு முதல் 5 வருடத்தில் இந்த மசோதாவை குறித்து வாய் திறக்கவில்லை. இதைத் தொடர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த மசோதாவை கொண்டு வருவதாக மீண்டும் வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வென்ற பிறகு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் பட்டியல் இடவில்லை. தற்போதும் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த மசோதா அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது. மகளிர் இட ஒதுக்கீடுக்கும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஒரு பக்கம் இந்த மசோதாவை தாக்கல் செய்துவிட்டு, அதே சமயம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த மசோதாவை அமல்படுத்த முடியாத வகையில் மோடி அரசு கொண்டு வந்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற நாடகத்தையே பாஜக அரங்கேற்றியுள்ளது” என்றார்.
இந்தியா அணி காலத்தின் தேவை
மேலும், “மக்கள் விரோத ஆட்சி நடத்தும் பாஜக, ஆர்எஸ்எஸ் வகுப்புவாத சக்திகளிடம் நாட்டை, அரசியல் அமைப்பை பாதுகாக்க, இந்தியா கூட்டணி என்பது காலத்தின் தேவை. இதனை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவு” என்றார். “தமிழக அரசு வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை பெண்களின் முன்னேற்றத்திற்கு நிச்சயம் உதவியாக அமையும். சனாதனம் குறித்து இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. அவர்கள் அதனை பேசுவார்கள். சனாதனம் குறித்து பேசுவது அந்தந்த கட்சியின் உரிமை ஆகும். இதனால் இந்தியா கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்றும் கூறினார். பேட்டியின்போது, சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.