மதங்களைக் கொண்டு
சாதிகளைக் கொண்டு
இனங்களைக் கொண்டு
மொழிகளைக் கொண்டு
இன்னும் இத்தியாதி
அடையாளங்களைக் கொண்டு
ஊரெங்கும் பலர்
குறளி பொம்மைகள் செய்து
வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்
மனிதர்கள்
ஏதாவதொரு வித்தைக்காரனிடம்
நின்று
வித்தையில் லயித்திருக்கிறார்கள்
லயிப்பில் அவர்தம்
மேனிகள் கரைகின்றன
மேனியில் கசியும் சத்துகள்
குறளி வித்தைக்காரனிடம் கொஞ்சமும்
மலை உச்சியிலிருந்து
வித்தைக்காரர்களை
ஆட்டுவித்துக்கொண்டிருக்கும்
பெரும் பூதத்திடம் அதிகமும்
சென்று சேர்ந்தவண்ணம் இருக்கின்றன
பார்வையாளர்கள் எலும்புக் கூடுகளாகிக்
கீழே சரியும்வரை
- மனோந்திரா