tamilnadu

img

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி முழுமை பெறுமா? -

தஞ்சாவூர், மே 24 -  டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் முழுமை பெறுமா என்ற சந்தேகம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.  காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலும் ஜூன் மாதம் 12ஆம் தேதி  மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே தொடங்கி, கர்நாடகத்தில் இருந்து மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.  செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 117.76 அடி நீர் இருப்புடன், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காவிரி டெல்டா பாசனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டுள்ளார். 

தொடர்ந்து, டெல்டா பாசனத்துக்கு, 26 அல்லது 27 இல் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 4,649 கிலோ  மீட்டர் தூரத்திற்கு, சிறப்பு தூர்வாரும் பணிகள் ரூ 80 கோடி மதிப்பீட்டில், கடந்த மே. 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 1,356.44 கிலோ மீட்டர் தூரத்திற்கு 170 பணிகள், ரூ 21 கோடி  மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.  இந்த பணிகளை வரும் மே 30ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து, எதிர்பாராத வகையில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப் பட்டதால் பணிகள் முழுமையாக முடிக்கப் படுமா என கேள்வி எழுந்துள்ளது.  மேலும், டெல்டா பகுதி ஆறுகளில் நடை பெறும் கட்டுமான பணிகளால், மேட்டூர் அணை யில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வீணாகும்  அபாயம் உள்ளதாக, விவசாயிகள் கூறுகின்றனர். கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப் படும் போது, டெல்டா மாவட்டங்களில், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில், 80 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் தூர்வாரும் பணிகள், தடுப்பணை கட்டுதல், கரை களை பலப்படுத்துதல், பாலங்கள் கட்டுமானப் பணிகள் பாதிப்படையும்.

பணிகள் நடைபெறும் இடங்களில், கரைகள் பலம் இல்லாத சூழலில், உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளதாக, விவ சாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். கல்லணையில் இருந்து பிரியும் கல்லணை கால்வாய் ஆற்றின் தரைத்தளம் மற்றும் கரை யின் பக்கவாட்டுகளில் சிமெண்ட் கான்கிரீட் தளம், தலைப்பு மதகு, குழாய் மதகுகள் சீரமைப்புப் பணிகள் நடக்கின்றன. மதகுகள் பணிகள் பல இடங்களில் துவங்கி பாதியில் உள்ளன.  தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் கல்லணைக் கால்வாய் கிளை ஆறுகளில், பாலங்கள் கட்டுமானம் பாதியில் உள்ளது. பணி கள் முழுமை பெறாமல் இருப்பதால், கல்லணை  கால்வாயில் தண்ணீர் திறந்தால், உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகும். இதை, முதல்வரிடம் அதிகாரிகள் தெளிவு படுத்த வேண்டும். அதிகமாக வரும் தண்ணீரை  கொள்ளிடம் ஆற்றில் திறந்து விட்டு, பணிகள் முடிந்த பின், பாசனத்துக்கு தண்ணீரை திறந்தால் நல்லது என்ற கருத்தும் விவசாயிகள் மத்தியில் உள்ளது.  இதேபோல் வெண்ணாறு, காவிரி, குட முருட்டி ஆறுகளில், தடுப்பணை கட்டும் பணி கள் இன்னும் முடிவடையவில்லை.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதி களில் பெய்யும் மழை நீர், கல்லணைக் கால்வாய்,  வெண்ணாற்றில் கலக்காமல் சைபன் எனப்படும் கீழ் பாலத்தின் வழியாக, காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் அடப்பன்பள்ளம் கீழ்பாலம் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.  இப்பணிகள் எப்போது முடியும் என தெரியவில்லை. மேட்டூரில் இருந்து முன் கூட்டியே தண்ணீர் திறப்பதால், தண்ணீரை எப்படி பயன்படுத்த முடியும் என ஆலோசித்து, அதற்கு ஏற்ப, நீர் மேலாண்மையை அதி காரிகள், அமைச்சர்கள் கையாள வேண்டும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் கூறுகையில், முழுமையாக தூர்வாரும் பணி கள் முடிந்தால் மட்டுமே ஒப்பந்ததாரருக்கு பணம்  தர வேண்டும். ஒரு இடத்தில் நான்கு நாட் களுக்கு முன்புதான் தூர்வாரும் பணிக்கான ஒப்புதல் வந்தது. தற்போது தண்ணீர் திறக்கப் படும் நிலையில் எப்படி பணி நடக்கும்? 

சி, டி பிரிவு

கால்வாய்களை தூர்வார வேளாண்மை பொறியியல் துறை மூலம் கடந்த 9ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கால்வாய்களில் தண்ணீர் வரும் போது எவ்வாறு தூர்வாரும் பணிகளை செய்ய முடி யும்? அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரடி யாக ஆய்வு செய்யாமல், நிதியை ஒதுக்கீடு  செய்யக் கூடாது. இது குறித்து முதலமைச்சர் சிற ப்பு கவனம் செலுத்தி ஆய்வு செய்யவேண்டும். 

தற்போதைய சூழலில் உள்ள சாதக, பாத கங்கள் குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதி களுடன் அரசு விரிவான ஆலோசனை நடத்த  வேண்டும். மேலும் அந்தந்த பகுதி விவசாயி களை கொண்டு ஆறு, குளம், ஏரி, கால்வாய் களை நேரடியாக ஆய்வு செய்து அவர்கள் ஒப்பு தலோடுதான் ஒப்பந்ததாரர்களுக்கு பணத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் இது முறைகேட்டில் தான் முடியும்.  தூர்வாரும் பணிக்கு போதிய அளவு இயந்தி ரங்கள் இல்லை. எனவே பணிகள் விரைவாக நடக்க வாய்ப்பில்லை. வழக்கமாக ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில்,  திட்டமிட்ட நாட்களுக்கு சில வாரங்களுக்கு முன்பாகவே தூர்வாரும் பணிகளை முடிப்பது  என்பது எந்த அளவு சாத்தியம் என்பதுதெரியவில்லை.  கூடுதல் இயந்திரம் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் சொன்னாலும், எதார்த்தத்தில் அவ்வாறு இல்லை. ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சி ஆதரவாளர்களாக இருப்பதால், பணியை முழுமையாக முடிக்காமல் பணத்தை அதிகாரிகளுடன் பங்கிடும் வாய்ப்பு உள்ளது.  எனவே, காலத்திலேயே பணிகள் நிறைவடைய வாய்ப்பில்லை. இப்போதுள்ள சூழ்நிலையே ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக அமையும் நிலையில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.

தஞ்சை அருகே மேலவெளியில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணியை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

திருவையாறு அருகே கோணக்கடுங்கலாற்றில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்

த.வி.ச மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் தஞ்சை அருகே தூர்வாரப்படாத பாசன வாய்க்காலை பார்வையிடுகின்றனர்.

செய்தி, படங்கள் : ஜகுபர் அலி 
 

;