கல்குவாரி தார் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
பெரம்பலூர், ஜுன் 24- கல்குவாரி மற்றும் தார் பிளாண்ட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, மருவத்தூர் கிராம மக்கள் திங்கட்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், பேரளி அருகேயுள்ள மருவத்தூர் கிராமத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கெனவே, இந்த கிராமத்தைச் சுற்றிலும் அதிக அளவிலான கல் குவாரிகள், தார் பிளாண்ட் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, அதிகளவிலான கனரக வாகனங்கள் வந்து செல்வதால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கல் குவாரிகள், கிரஷர்கள் மற்றும் தார் பிளாண்டுகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மருவத்தூர் கிராமத்தில் தற்போது புதிதாக தார் பிளாண்ட் மற்றும் கல் குவாரி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அண்மையில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திலும், தங்களது கருத்துகளை பொதுமக்கள் தெரிவித்தனர். இருப்பினும், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தற்போது தார் பிளாண்ட் மற்றும் கல்குவாரி அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கல்குவாரி, தார் பிளாண்ட் அமைப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முழக்கமிட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள், கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.