வேள்பாரியின் வெற்றி உலா - டி.கே.ரங்கராஜன்
உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான மாமேதை மார்க்ஸ் மூலதனம் என்ற அரிய நூலை படைத்தளித்தவர் என்பது மட்டுமல்ல, ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட செவ்வியல் இலக்கிய மேதைகளின் காவியங்களை முழுவதுமாக உள்வாங்கியவர். இன்னும் சொல்லப்போனால், மார்க்ஸ் - ஜென்னி காதலுக்கு பாலமாக இருந்தது ஷேக்ஸ்பியரின் படைப்புகள். கம்யூனிஸ்ட்கள் என்பவர்கள் வாழ்வியலை விளக்குபவர்கள் மட்டுமல்ல, வாழ்க்கையை கொண்டாடுபவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமுஎகச மதிப்புறு தலைவருமான தோழர் சு.வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ ஆனந்த விகடன் ஏட்டில் 111 வாரங்கள் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. விகடன் பதிப்பகம் இதை இரு தொகுதிகள் கொண்ட பெருநூலாக வெளியிட்டது. 1408 பக்கங்களைக் கொண்ட இந்த வரலாற்று நாவல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானது ஒரு பெரும் வரலாற்று சாதனையாகும். இந்த சரித்திர சாதனையை கொண்டாடும் வகையில், விகடன் பிரசுரம் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமான விழா நடைபெற்றது. ஆனந்த விகடன் ஏடு அடுத்தாண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது. தமிழ் ஊடக உலகில் ஆனந்த விகடனுக்கு என்று தனித்த ஒரு இடம் உண்டு. மாறி வரும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு, வளர்ந்து கொண்டே வரும் நிறுவனம் இது. விழாவில், இந்நிறுவனத்தின் சார்பில் பேசிய பா.சீனிவாசன், “சு.வெங்கடேசன் விகடனுக்கு கிடைத்த பெரும் வரம் என்று குறிப்பிட்டது, பெருமிதம் அளிப்பதாக இருந்தது. விகடன் அவ்வளவு எளிதாக யாரையும் பாராட்டும் நிறுவனம் அல்ல. வேள்பாரியால் விகடனுக்கும், விகடனால் வேள்பாரிக்கும் ஏற்பட்டுள்ள மகத்தான பெருமையாகும் இது. விழாவில் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசும் போது, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது தனக்குள்ள பெருமதிப்பை வெளிப்படுத்தினார். அவர் என்னுடைய இனிய நண்பர். தன்னுடைய உரையில் எங்களது நட்பையும் நினைவுகூர்ந்தார். ரஜினிகாந்த் பேசும் போது, அவர் எந்தளவுக்கு நூல்களை வாசிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இந்த விழாவுக்கு என்னை ஏன் அழைத்தீர்கள் என்று அவர் கேட்டாலும், அவருடைய உரையே அதற்கு பதிலாக அமைந்தது. சு.வெங்கடேசனின் எழுத்து குறித்து அவர் கூறியது அனைத்தும் உண்மை. அவர் ஒரு வெகுஜன கலைஞர் மட்டுமல்ல; ஆழமாக வாசிப்பவராகவும் யோசிப்பவராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருக்கிறார் என்பதை அவரது உரை வெளிப்படுத்தியது. கல்கி, சாண்டில்யன் போன்ற புகழ்மிக்க சரித்திர நாவலாசிரியர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிர்கள் உண்டு. எந்தவொரு படைப்பாக இருந்தாலும், அதற்கொரு அரசியல் உண்டு. பெரும்பாலான சரித்திர நாவல்கள் மன்னர் காலப் பெருமையை பேசுகிறது என்றால், வேள்பாரி நாவல் மூவேந்தர்களையும் ஒருசேர எதிர்த்து நின்ற வேளிர் குல வீரனின் பெருமையைப் பேசுகிறது. பேரரசின் பெருமைகளைப் பேசவே பெரும் காப்பியங்கள் தோன்றின. ஆனால், வேள்பாரி என்பது ஒரு கம்யூனிஸ்ட் இயக்க எழுத்தாளரால் எழுதப்பட்ட பேரரசுகளுக்கு எதிரான மக்கள் தலைவனாக விளங்கிய பாரியின் வரலாறு ஆகும். பாரிக்கும், கபிலருக்கும் இடையிலான காவிய நட்புக்கு சாட்சியம்கூற ஒரு சில பாடல்கள் உண்டு. முல்லைக்குத் தேர் தந்தான் பாரி என்ற அளவில் மட்டுமே வெகுமக்கள் பாரியை அறிந்திருந்த நிலையில், இலக்கியத்தில் கிடைத்த ஒரு சில பாடல்களையும், கதைகளையும் வைத்து ஒரு பிரம்மாண்டமான நாவலை சு.வெங்கடேசன் எழுதியுள்ளார். இது ஒரு புனைவு இலக்கியம் என்ற வகையில், கற்பனையும், வரலாறும் இணைந்தே வருகிறது. ஆனால், இவை இரண்டும் கலை வடிவமாக மிக நேர்த்தியாக பின்னிப் பிணைந்துள்ளது. இடதுசாரி எழுத்தாளர்கள் வெகுஜன வாசகப் பரப்பையும் பெற வேண்டியது அவசியம். கொள்கையிலும், இலக்கிய கோட்பாட்டிலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாதேயன்றி, மக்களை கவரும் வகையில் எழுதுவதும் அவசியம். இயக்குநர் ஷங்கர் பேசும் போது, நாவலின் ஒவ்வொரு பக்கமும் திரைக்கதை போல எழுதப்பட்டிருப்பதை வியந்து பேசினார். ஒரு எழுத்து வடிவம், காட்சி வடிவமாக மாறுவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. வீரயுக நாயகன் வேள்பாரி தன்னுடைய கனவுப் படம் என்றும் அவர் கூறினார். அவருடைய கனவு நிறைவேறுவதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒரு சிறந்த படம் கிடைக்கும் என்பது உறுதி. திரைக்கலைஞர் ரோகிணியும், நீயா? நானா? கோபிநாத்தும் வித்தியாசமான கோணங்களில் வேள்பாரி நாவல் குறித்து விவரித்தனர். திரைக்கலைஞர் ரோகிணி சுற்றுச்சூழல் குறித்தும் தொடர்ந்து உரையாடி வருபவர். அவரது உரையிலும் அது வெளிப்பட்டது. தோழர் சு.வெங்கடேசன் தன்னுடைய காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றவர். அது அவருடைய முதல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து, வீரயுக நாயகன் வேள்பாரி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது, மத்திய தர மக்கள் அதை கொண்டாடி மகிழ்ந்தார்கள். விழாவின் ஒரு பகுதியாக, வேள்பாரி நாவலில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்ட குழந்தைகள் மேடை ஏறினர். இது மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்தது. ஒரு நாவலின் கதாபாத்திரங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல மாறுவது என்பது ஒரு ரசவாத வித்தையாகும். அதை தோழர் வெங்கடேசன் சாதித்திருக்கிறார். விழாவுக்கு வந்த ரசிகர்கள் பலர், தங்களை பாரியின் பறம்பு நாட்டு குடிமக்கள் என்று கூறிக் கொண்டதும் ஆச்சரியமான ஒன்றாகும். பல ஆயிரம் பக்கம் கொண்ட இந்த நாவல், பலருக்கு மனப்பாடமாக தெரிந்திருக்கிறது என்பதை விழாவின்போது புரிந்து கொள்ள முடிகிறது. வேள்பாரி நாவல் இந்திய மொழிகள் மட்டுமின்றி, உலக மொழிகளிலும் உலா வர வேண்டும். சங்க இலக்கியம் துவங்கி இன்றைய காலம் வரை தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் படைப்புகளோடு வேள்பாரியும் இணைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இடதுசாரி எழுத்தாளர்களின் வரிசையில் தோழர் சு.வெங்கடேசன் குறிப்பிடத்தக்கவராக மாறியுள்ளார். அவரை உருவாக்கிய இடதுசாரி இயக்கத்திற்கும், தமுஎகசவிற்கும் இது பெருமை அளிக்கக் கூடிய ஒன்றாகும். மூவேந்தர்களின் முற்றுகையினால் உண்மையில் பாரி கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், தோழர் சு.வெங்கடேசனின் எழுத்துக்களின் வழியே வரலாற்று வீதியில் பாரியின் தேர் என்றென்றும் பயணம் செய்து கொண்டே இருக்கும். - கட்டுரையாளர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்