வீரவணக்கம் தமிழ் திரைப்படம் - ஜி. ராமகிருஷ்ணன்
தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலங் களிலும் இந்த மாதம் 29 அன்று திரையரங்குகளுக்கு வர இருக்கிறது, ‘வீரவணக்கம்’. அண்மையில் நடைபெற்ற முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், தி.க தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோருடன் சேர்ந்து இந்தப் படத்தைக் காணும் வாய்ப்பு அமைந்தது. தமிழ்நாடு, கேரள மக்களின் சகோதரத்து வத்தை உறுதிப்படுத்தும் ஓர் அற்புதமான படம் இது. இரண்டு மாநிலங்களுக்குமான வரலாறு சார்ந்த தொப்புள்க்கொடி உறவை மையப்படுத்து கிறது. இ.எம்.எஸ் “எனது தலைவர் கிருஷ்ண பிள்ளை” என்று தனது சுயசரிதையில் எழுதி யிருக்கிறார். வைக்கத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த கம்யூனிஸ்ட் போராளி கிருஷ்ணப்பிள்ளை சிறியதொரு கிராமத்திற்குச் சென்றாலும் இரண்டே நாட்களில் அங்குள்ள மக்களை அரசியல்படுத்தி கம்யூனிஸ்ட்டுகளாக மாற்றிடும் திறன் பெற்றி ருந்தவர். கட்சி தடைசெய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் இடலாக்குடி சிறையில் அடைக்கப்பட்டார். கம்யூனி ஸ்ட்டுகள் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அந்தச் சிறையில் அடைத்து வைத்து, அன்றைய பிரிட்டிஷ் அரசு சித்ரவதை செய்தது. அந்தச் சிறையில் 1940-களில் கிருஷ்ணப்பிள்ளை, மதுரை யைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் இருவரும் அடைக்கப்பட்டனர். அங்கே அவர்கள் உயிர்த் தோழர்கள் ஆனார்கள். அந்த நட்பால் வேலாயுதமும் கம்யூனிஸ்ட் ஆனார். படத்தில் கிருஷ்ணப்பிள்ளையாக சமுத்திரக் கனி நடித்திருக்கிறார். வேலாயுதத்தின் பேரனாக பரத்தும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர் 95ஆவது அகவையில் இருக்கும் கேரளத்தின் புரட்சிப் பாடகி பி.கே.மேதினி. சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் தமிழகத்தி லும் கேரளாவிலும் சாதிக் கொடுமை பல கொடூர மான வடிவங்களில் இருந்தது. குறிப்பாக, கேர ளத்தின் சாதிக் கொடுமையைப் பற்றிக் குறிப்பிட்ட சுவாமி விவேகானந்தர், “பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் கீழத்தஞ்சை உள்ளிட்டு எல்லா மாவட்டங்களிலும் சாதிக் கொடுமை நிலவியது. சாதிக் கொடுமையும், நிலப்பிரபுத்துவச் சுரண்டலும் பின்னிப் பிணைந்திருந்த நிலையில், கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தினார்கள். புன்னப்புரா, வய லார் உள்ளிட்ட போராட்டங்களைத் தொடங்கியவர் கிருஷ்ணப்பிள்ளை. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த அந்தப் போராட்டங்கள் படத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நிலப்பிரபுத்துவச் சுரண்டலையும், கொடூர மான சாதியக் கொடுமையையும் ஒருசேர எதிர்த்து நடந்த போராட்டம் அம்மாநிலத்தில் தீண்டாமை பெருமளவுக்கு ஒழிக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. மேலும், 1957இல் ஆட்சிப் பொறுப் பேற்ற இ.எம்.எஸ். தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசு மேற்கொண்ட நில விநியோக நட வடிக்கைகள் தேசத்திற்கே வழிகாட்டும் அளவுக்கு பெரிய மாற்றங்களை நிகழ்த்தின. உயர்சாதியைச் சேர்ந்தவரும் செல்வந்தரு மான ராஜ மகேந்திரன் தமிழகத்தில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் கடுமையான சாதி மற்றும் கொடுமை களை அனுபவித்து வரும் பட்டியல் சமூக மக்க ளின் மீட்பராக மாறுகிறார். தனது தாத்தாவிற்கும், அவரோடு இடலாக்குடி சிறையில் அடைக்கப் பட்டிருந்த கிருஷ்ணப்பிள்ளைக்கும் நட்பு ஏற்பட்ட தை அந்த மக்களிடம் கூறுகிறார். கிருஷ்ணப் பிள்ளையின் வரலாற்றை எடுத்துக்கூறி சாதிக் கொடுமைகளை எதிர்த்துத் தைரியத்துடன் போராட ஊக்குவிக்கிறார். அந்தக் காலத்தில் கிருஷ்ணப்பிள்ளையுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற சிறுதா என்ற புரட்சிப் பாடகியை சந்திப்பதற்காக மகேந்திரன் கிராமவாசிகளுடன் கேரளத்திற்குச் செல்கிறார். அந்த சிறுதாவுக்கு இப்போது 97 வயதாகிறது. தன்னைச் சந்திக்க வந்த கிராம மக்களுக்கு சிறுதா சொல்லும் போராட்டக் கதைகள் அவர்களுக்குத் துணிவையும் நம்பிக்கையையும் ஊட்டுகின்றன. தோழர் பி. கிருஷ்ணப்பிள்ளை மறைந்துவிட்டாலும் இந்த மக்களுக்கு ஒரு புதிய ஊக்க சக்தியாகத் திகழ்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் கேரள மாநிலக் குழு செயலாளராக இருந்தவர் கிருஷ்ணப்பிள்ளை. அடக்குமுறைச் சூழலில் மாறுவேடத்தில் ரகசியமாக இரு மாநிலங் களிலுமே அவர் பணியாற்றினார். அடக்கு முறை களை எதிர்கொண்ட அவரது துணிச்சல், சாகசம், தலைமைத்துவ திறன்கள் படத்தில் உயிர்ப்போடு சித்தரிக்கப்பட்டுள்ளன. இடலாக்குடி சிறையில் இருந்தபோது, சுசீந்திரம் கிராமத்தின் தங்கம்மா வுடன் ஏற்பட்ட நட்பு, காதலாக, திருமண உறவாகப் பரிணமிப்பதைக் காட்டியிருப்பது படத்திற்கு மேலும் மேலுமோர் உயிர்ப்பைத் தந்துள்ளது. கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வித்திட்ட கிருஷ்ணப்பிள்ளை தமிழகத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ் மகேந்திரன் மகள் லட்சுமி பட்டிய லினத்தைச் சார்ந்த இளைஞரை விரும்புகிறார். இந்தச் சாதி மறுப்புக் காதலை சாதி உணர்வா ளர்கள் ஏற்கவில்லை. தமிழகத்தில் இன்றும் தொடர்கதையாக உள்ள சாதி ஆணவக் கொலை யை இப்படம் சாடுகிறது. இரண்டு மாநிலங்களிலும் நிலவிய சாதிக் கொடுமையை எடுத்துக் காட்டும் ‘வீர வணக்கம்’, தந்தை பெரியார் முன்னெடுத்த சமூக சீர்திருத்த இயக்கத்தைக் கொண்டாடுகிறது. படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்த சமுத்திரக்கனி, பரத், மேதினி பங்களிப்பு சிறப்பா னது. பிற பாத்திரங்களில் ரித்தேஷ், சுரபி லட்சுமி, பிரேம்குமார், பரணி, ஐஸ்வீகா, ஆதர்ஷ், சித்தாங் கனா, சித்திக், அரிஷ்டோ சுரேஷ், ரமேஷ் பிசாரடி, பீமன் ரகு, பிரமோத் வெளியநாடு, உல்லாஸ் பந்தளம், ரியாஸ் நெடுமங்காடு ஆகியோரும் சீரான உணர்வார்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தமது தனித்துவக் குரலோடு கூடிய பாடல்களால் குடியேறியவரான டி.எம். சௌந்தரராஜனின் புதல்வர் டி.எம்.எஸ். செல்வகுமார் பின்னணிப் பாடகராக அறிமுக மாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீர வரலாற்றை யாராலும் மறுக்க முடியாத, மறக்க முடியாத வடிவில் திரைப்படமாக பதிவுசெய்வது எப்போதாவதுதான் நிகழ்கிறது. அந்த வகையில் இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் மிக நேர்த்தியான கலை வடிவில் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் ஓர் அத்தியா யத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழிலும் மலையா ளத்திலும் மட்டுமல்லாமல், எல்லா மொழிகளிலும் மக்களிடம் போய்ச் சேர வேண்டிய படைப்பு இது. மனிதரை மனிதர் சுரண்டும் முறையை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கமும், கம்யூனிஸ்ட்டுகளும் இந்த நாட்டின் மக்களுக்காக எத்தகைய வீரப் போராட்டங்களை மேற்கொண்டார்கள், அருந் தியாகங்களை மேற் கொண்டார்கள் என்பனவற்றை அறிந்துகொள் ளும் ஆர்வத்தை அனைவருக்கும் ஏற்படுத்தும் படம் என்றால் மிகையில்லை. கடந்த காலத்தை உரமாக்கி எதிர்காலத்தை நமதாக்கிட நிகழ்கா லத்தின் இளம் தலைமுறையினருக்கு ஒரு கையேடாக வந்துள்ளது ‘வீர வணக்கம்’.