tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

தேசிய கைத்தறி  தினத்தை முன்னிட்டு  பல்வேறு நலத்திட்ட உதவிகள்

அரியலூர், ஆக. 7-  ஜெயங்கொண்டம் - தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள வாரியங்காவல் கிராமத்தில்   கைத்தறித்துறை கும்பகோணம் சரகம் சார்பில் 11 ஆவது தேசிய கைத்தறி தின விழா கொண்டாடப்பட்டது.  இதில் நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், கைத்தறித்துறை கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கைத்தறித்துறை உதவி இயக்குனர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 13 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை ஆணைகள் வழங்கப்பட்டது, முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 16,00,000 ரூபாய் காண ஆணைகள் 32 நபர்களுக்கு வழங்கப்பட்டன.  மேலும், தமிழக அரசு கைத்தறி துறை ஆதரவு திட்டத்தின் கீழ், 20 நபர்களுக்கு 76,000 மதிப்பில் அச்சு பண்ணைக்கான பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் வட்டத்திற்கு உட்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அடிக்கல்  நாட்டு விழா

தஞ்சாவூர், ஆக. 7- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதிக்கு, ரூ.58.41 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை புதன்கிழமை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. திறந்த வெளியில் இருப்பதால் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது. இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பேரில், சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது.

ஆக.9 சிறப்பு குறைதீர் முகாம்

நாகர்கோவில்,ஆக.7- பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறை பாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் ஆகஸ்ட் 9 சனிக்கிழமையன்று காலை 10  மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில்  நடைபெற உள்ளது.

தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சிகள்

அறந்தாங்கி, ஆக.7- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக தாய்பால் வார விழா நடைபெற்றது.  அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் 60 பேருக்கு மாருதி ஏஜென்ஸி, சுந்தரம் பேக்கரி சார்பாக வழங்கப்பட்ட ரூ.150 மதிப்புள்ள சத்தான உணவு பொருட்களை அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் ரவிசங்கர் வழங்கினார். அவருடன் ரோட்டரி சங்க செயலாளர் காசிநாதன், பொருளாளர் சோலைராஜ், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் இருந்தனர். அறந்தாங்கி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள் இளையராஜா, ரியாஸ், பாத்திமா ஆகியோர் தாய் பாலின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து தாய்மார்களிடம் கூறினர். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், அம்மாபேட்டை லயன்ஸ் சங்கம் இணைந்து உலக தாய்ப் பால் வார விழாவை நடத்தின. சாலியமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவர் பழனிவேல் யோகாவால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி கூறினார். மருத்துவர் வெங்கடேஷ் குமார் தாய்ப்பாலின் மகத்துவத்தை எடுத்துக் கூறினார்.