tamilnadu

38 சுங்கச்சாவடிகளில் அநியாய கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

38 சுங்கச்சாவடிகளில் அநியாய கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

சென்னை, செப். 1 - தமிழ்நாட்டில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன உரிமையாளர்கள், ஒட்டுநர்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.  ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பை ஒன்றிய அரசு தனியாருக்கு வழங்கியுள்ள நிலையில், அவர்கள், நாடு முழுவதும் 892 சுங்கச்சாவடிகளை வாகன உரிமையாளர்களிடம் சுங்கக் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இந்த கட்டணமானது, வாகன உரிமையாளர்களுக்கு மிகப்பெரும் சுமையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 6,606 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 82 சுங்கச் சாவடிகள் உள்ள நிலையில், 78 சுங்கச் சாவடிகளில் தனியார் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஆண்டுக்கு 5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சுங்கச் சாவடிகளை இரண்டு பகுதிகளாக பிரித்து, ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. கடைசியாக ஏப்ரல் 1 அன்று தமிழகத்தில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் ரூ. 25 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது.  தற்போது, விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குறிப்பாக விஜயவாடி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 5 முதல் 7 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வாகன வகைகளைப் பொறுத்து கட்டணம் ஒரு பயணத்திற்கு ரூபாய் 5 முதல் ரூபாய் 150 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.