திருவாரூரில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிபிஎம் அலுவலகத்தில் திருமணம்
திருவாரூர், செப்.11 - திருவாரூரில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிபிஎம் அலுவலகத்தில் திருமணம் நடைபெற்றது. தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய சட்டத்தினை இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பினை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் புதன்கிழமை அன்றுடன் மூன்றாவது காதல் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த எடையூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் பிரவீன் குமார் (24), மேலப்பெருமழை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரது மகள் வைஷ்ணவி (24) ஆகியோர் நாகப்பட்டினத்தில் கல்லூரியில் படித்த போதிருந்து, கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த ஆக.28 ஆம் தேதி வேதாரண்யத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலைமையில், தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, மாவட்டச் செயலாளர் இரா.மாலதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி, கே.பி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கலைமணி, சிறுபான்மையினர் நல குழு மாவட்டச் செயலாளர் இராமசாமி, நகரச் செயலாளர் கேசவராஜ் உள்ளிட்ட பலர் இத்திருமணத்தை நடத்தி வைத்தனர். மேலும், பாதுகாப்பு வழங்க கோரி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.