tamilnadu

img

திருநர்கள் உரிமைகளைப் பறிக்கும் புதிய சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் – தமுஎகச மாநிலக்குழு

திருநர்கள் உரிமைகளைப்  பறிக்கும் புதிய சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் அளித்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியாவின் பன்முகத்தன்மையையும், விளிம்புநிலை மக்களின் அடிப்படை உரிமைகளையும் நசுக்கும் செயலை தொடர்ந்து செய்து வரும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் ”திருநர்கள் உரிமை பாதுகாப்புச் சட்டம் 2026” என்கிற பெயரில் கொண்டு வந்துள்ள சட்ட முன்வரைவு கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

2019-ஆம் ஆண்டு இச்சட்டம் முதன்முதலில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே இச்சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்புகள் எழுந்தன. 2019ல் வந்த முன்வரைவில் இருந்த குறைபாடுகளை சரி செய்வதற்கு பதிலாக, தற்போது மீண்டும் முன் மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் மூலம் மொத்த உரிமைகளையும் பறிக்கும் செயலை ஒன்றிய அரசு செய்துள்ளது.

திருநர்கள் உடலால் ஒரு பாலினமாக பொதுச்சமூகத்தால் அடையாளப்படுத்தப்பட்டாலும், உணர்வால் மற்றொரு பாலினமாக தங்களை உணர்கிறார்கள். இவர்களின் இந்த அகவுணர்வை  அங்கீகரிப்பதே ஒரு ஜனநாயக சமூகத்தின் குறைந்தபட்ச அறமாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு மனிதனுக்கும் தான் யார் என்பதைத் தீர்மானிக்கும் தன்னாட்சி உரிமையை வழங்கியுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்டத் திருத்தங்கள் இந்த உரிமையை பறிப்பதோடு, திருநர்களின் உணர்வுகளை கணக்கில் கொள்ளாமல் அதை ஒரு "அரசுச் சான்றிதழ்" தரும் சடங்காக மாற்ற முயற்சிக்கிறது. இந்தச் சட்டத் திருத்தங்கள், திருநர் சமுகத்தின் மனித உரிமையை மேலும் பறிக்கும் செயலாக உள்ளது.

 

ஒரு நபர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது மருத்துவக் குழுவிடமோ உறுதி செய்ய வேண்டும் என்கிறது இச்சட்டம். நம் சமூக அமைப்பில் ஒரு சராசரி நபரைப் போல், ஒரு திருநர் நடத்தப்படுவதில்லை. இந்தச் சூழலில் அரசு அதிகாரியின் முன் சான்றிதழுக்காக நின்றால் என்ன நடக்கும் என்பது சொல்லி விளக்க வேண்டியதில்லை. அதோடு தன்னைத் திருநர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள மருத்துவப் பரிசோதனைகள் அல்லது பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்ததற்கான ஆதாரங்களைக் கோருகிறது இப்புதிய சட்டம்.

பொருளாதார வசதி, சமூகத்தில் மதிப்போடு நடத்தப்படாத சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பால் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இயலாத திருநர்கள் இங்கு கணிசமாக உள்ளார்கள். அவர்களிடம் தங்கள் பாலினத்தை உறுதி செய்ய, உடல் ரீதியான பரிசோதனைகளை செய்த சான்றிதழ்களை சட்டத்தின் வழியே கட்டாயமாக்க முயல்வது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.  இது 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க 'நல்சா' (NALSA) தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது.

"ஒவ்வொரு நபரும் தனது பாலின அடையாளத்தைத் தாமாகவே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை உண்டு" என்கிற உச்ச நீதிமன்றத்தின் ஆணை, இந்தத் திருத்தங்கள் மூலம் திட்டமிட்டு நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. சி.ஐ.ஏ (CAA) மூலம் மத அடிப்படையில் மக்களைப் பிரித்து, அதில் ஒரு பகுதியினரை அந்நியப்படுத்த நினைத்த இதே ஒன்றிய அரசு, தற்போது பாலின அடையாளத்தைக் கொண்டு திருநர் சமூகத்திற்குள் பிளவை உண்டாக்கும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது.

அரவாணிகள், ஹிஜ்ராக்கள் கின்னர் (Hijras/Kinnars) போன்ற பாரம்பரியக் குழுக்களை மட்டும் அங்கீகரித்துவிட்டு, நவீனச் சூழலில் சுய அடையாளத்துடன் வாழும் மற்ற திருநர்களைப் புறக்கணிப்பது சரியல்ல. காலம் காலமாக தங்களின் இருப்பிற்காகப் போராடும் ஒரு சமூகத்தின் மீது 'ஆய்வறிக்கை' என்கிற பெயரில் உளவியல் வன்முறையை ஏவுவது கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே அரசு அலுவலகங்களில் பாகுபாட்டையும் ஊழலையும் சந்திக்கும் இச்சமூகத்தினர், இனி தங்களை நிரூபிக்கவே சான்றிதழுக்காக காத்திருந்து மேலும் சுரண்டலுக்கு உள்ளாகும் சூழல் உருவாகும். திருநர்களின் தன்னாட்சி மற்றும் சுய அடையாள உரிமையை முழுமையாக மதிக்கும் வகையில், இந்தத் திருநர் விரோதத் திருத்தங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமுஎகச கோருகிறது. சமூக நீதியின் அடிப்படையில் திருநர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக உறுதி செய்யவும் ஒன்றிய மாநில அரசுகளை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

திருநங்கைகளின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். எனவே, அவர்களின் நலன் அந்தந்த மாநிலங்களின் சமூகச் சூழலோடு பிணைக்கப்பட்டுள்ளதாக நல்சா தீர்ப்பு கருதுகிறது.

இந்தியாவில் தேசிய அளவிலான சட்டம் வருவதற்கு முன்பே, தமிழ்நாட்டில் 'திருநங்கைகள் நல வாரியம்' போன்ற சிறப்பான முன்னோடி சமூக நலத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. தற்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 2026 திருத்த சட்டத்தால், மாநிலங்கள் ஏற்கனவே வழங்கி வரும் கூடுதல் சலுகைகளையும்,  திட்டங்களையும் நீர்த்துப்போகச் செய்யக்கூடும்.

திருநர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் கண்ணியமான வாழ்விற்காகவும்  தொடர்ந்து கருத்தியல் தளத்திலும் படைப்புத் தளத்திலும் போராடும் அமைப்பு தமுஎகச. திருநர்களை குற்றவாளிகளாகவோ, பரிதாபத்திற்குரியவர்களாகவோ பார்க்கும் பிற்போக்குத்தனமான பார்வையை விடுத்து, அவர்களை சமத்துவக் குடிமக்களாக நடத்தும் ஜனநாயக சட்டங்களை மட்டுமே இங்கு இயற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அதே வேளையில், இந்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான திருநர்கள் நடத்தும் போராட்டங்களிலும் தமுஎகச அவர்களோடு துணை நிற்கும் என்றும் உறுதி கூறுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.