tamilnadu

img

'இருவர் தலைமையால் சரியான முடிவுகளை  உரிய நேரத்தில் எடுக்கமுடியவில்லை'

மதுரை:
இருவர் தலைமையால் சரியான முடிவுகளை உரிய நேரத்தில் எடுக்க முடியவில்லை. அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு வெளியே சொல்ல முடியாத காரணங்கள் உண்டு என மதுரை  வடக்குத் தொகுதி  சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் ஆன வி.வி. ராஜன் செல்லப்பா கூறினார்.

சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
அதிமுக கட்டுப்பாட்டோடு செயல்பட்டிருந்தால் அதிமுகவின் கோட்டையான திருப்பரங்குன்றம் போன்றவற்றை இழந்திருக்க முடியாது. ஆளுமைத் திறன் மிக்க, ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ், மரியாதை மிக்க தலைமையின்  கீழ் அதிமுக வர வேண்டும்.  வெற்றி பெற்ற ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களும் அம்மா சமாதிக்குச் சென்று வணக்கம் சொல்லி வெற்றியை சமர்ப்பிக்கவில்லை. இந்த நெருடல்களுக்கு காரணம் யார் ? எங்களிடம் உட்கட்சி பூசல் இருக்கலாம். திமுக தலைவர் எதிர்பார்ப்பது நடக்காது. அவர் அதிமுகவை வீழ்த்த முடியாது.

இருவர் தலைமையால் சரியான முடிவுகளை உரிய நேரத்தில் எடுக்க முடியவில்லை. கட்சியை நடத்துவதற்கு அதிகாரமிக்க ஒரே தலைமை வேண்டும்.குருமூர்த்தி எதுவேண்டுமென்றாலும் சொல்லட்டும். தோல்விக்கு  பிஜேபி கூட்டணி காரணம் எனச் சொல்லவில்லை. நாங்கள் இன்னும் சுய பரிசோதனை செய்யவில்லை.வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு வெளியே சொல்ல முடியாத காரணங்கள் உண்டு. இயற்கையான தோல்வி என்பதை விட தோல்வியை திருப்பரங்குன்றம், ஆண்டிப்பட்டி தொகுதிகளில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். மதுரை மக்களவைத் தொகுதி தோல்விக்கு காரணம் உட்கட்சி பூசல் இல்லை. இரண்டு தலைமை இருக்கும் போது இவர் சொல்வதைக் கேட்பதா? அவர் சொல்வதைக் கேட்பதா? என்ற குழப்பம் இருக்கிறது.
பொதுக் குழுவைக் கூட்டி ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும், மீதி நால்வரும் ஒரு தலைமையை ஏற்படுத்தி, அதிகாரங்களை உங்களுக்குள் பகிர்ந்து கொண்டு எங்களைக் கட்டுப்படுத்தி ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றுங்கள்.இவ்வாறு வி.வி. ராஜன் செல்லப்பா கூறினார்.

எடப்பாடி சொல்வது இதுதான்...
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், ஒற்றைத்தலைமை வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டி அளித்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, '' அதுகுறித்த முழுமையான விபரங்கள் தெரிந்தபின் கூறுகிறேன். அதிமுகவில் கோஷ்டி பூசல் கிடையாது. அப்படியோர் தவறான செய்தியை;g பரப்ப வேண்டாம்,'' என்றார்.