நகைக்கடை அதிபருக்கு ஆதரவாக ஏழையின் குடிசையை இடிக்க முயற்சிப்பதா
சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, ஆக. 28- நத்தம் மனையிடத்தை நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமானது எனக்கூறி போலியான ஆவணத்தின் மூலம் நீதிமன்ற உத்தரவைப் பெற்று நகைக்கடை அதிபருக்கு ஆதரவாக, ஏழையின் குடிசையை இடிக்க முயலும் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட போஸ்நகர் பகுதியில் உள்ள மணிப்பள்ளம் சாலை அருகே, நத்தம் மனையிடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தார், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வந்தார். இந்த இடத்தின் அனுபவ பாத்தியத்தை முன்னிட்டு, மேற்படி சாந்தாரின் வாரிசுகள் வடிவுக்கரசி, பாண்டியன் ஆகியோர், நத்தம் நிலவரித் திட்டத்தின் மூலம் பட்டா பெற்றுள்ளனர். அதன்பிறகு அந்தப் பட்டாவிற்கு வருவாய்த்துறையின் மூலம் பதிவுப் பத்திரம் பெற்று நகராட்சி வரியும் தொடர்ந்து செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் இடத்திற்கு பின்புறம் உள்ள இடத்தை புதுக்கோட்டையில் உள்ள பிரபல நகைக்கடை அதிபர் வாங்குகிறார். அவரின் இடத்திற்கு முழுமையாக சாலை வசதி இருந்தும், மேற்படி வடிவுக்கரசி, பாண்டியன் இடத்தில் தனக்கு வழிவிட வேண்டும் என தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். அவ்வாறு வழிவிட மறுத்ததால் மேற்படி இடம் நெடுஞ்சாலைதுறை பராமரிப்பில் உள்ளதாக போலியாக சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் நகைக்கடை உரிமையாளர் வழக்கு தொடுத்துள்ளார். இதுகுறித்து, மேற்படி வடிவுக்கரசி, பாண்டியன் ஆகியோரிடம் எந்தவிதமான விசாரணையும் நடத்தப்படாமல், அது ஆக்கிரமிப்பு என்றும், அதை அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து வடிவுக்கரசி, பாண்டியன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வடிவுக்கரசி, பாண்டியன் ஆகியோரது குடிசைகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். நகைக்கடை அதிபருக்கு ஆதரவான நெடுஞ்சாலை துறையினரின் நடவடிக்கையை கண்டித்தும், ஆவணங்களை சரிபார்த்து நெடுஞ்சாலை துறையே மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கவிவர்மன், ஏ.ஸ்ரீதர், கி.ஜெயபாலன், ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல் ஜாபர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி.அன்புமணவாளன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா, மாநகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.ரகுமான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. நாகராஜன், எஸ். ஜனார்த்தனன், மாநகரச் செயலாளர் எஸ். பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.காயத்ரி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மகாதீர், மாணவர் சங்க மாவட்டச் செயலளார் ஆர்.வசந்தகுமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல் ஆர்ப்பாட்டத்தின் முடிவில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளரிடம் இதுகுறித்து கோரிக்கை மனு ஒன்றை, மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் அளித்தார். அந்த மனுவில், நெடுஞ்சாலைத்துறை சம்மந்தப்பட்டவர்களின் ஆவணங்களை பரிசீலிக்காமல் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் ஆக்கிரமிப்பு என சித்தரித்து, இடிக்கும் நடவடிக்கை நியாயமற்ற செயலாகும். இந்த இடத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மேல்முறையீடு செய்ய வேண்டுகிறோம். ஆவண நகல்களை நெடுஞ்சாலைத்துறைக்கு சமர்ப்பிக்க நாங்கள் தயாராக உள்ளோம். தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தையும், நெடுஞ்சாலைத்துறையையும் தன் சுயலாபத்துக்கு பயன்படுத்துகிறார். எனவே, ஆக்கிரமிப்பு என அகற்ற நெடுஞ்சாலைத்துறை எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.