tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

உடல் தானம் செய்த சிபிஎம் மூத்த தலைவர்  தோழர் ஜீவபாரதி பட திறப்பு புகழஞ்சலி 

கும்பகோணம், ஜூலை 3-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான தோழர் ஜீவபாரதி கடந்த 23 ஆம் தேதி காலமானார். அவரது உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர்களின் கல்வி ஆய்விற்காக உடல் தானம் செய்யப்பட்டது.  இந்நிலையில், அவரது சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் ராணி மகாலில் காலை பத்து மணிக்கு தோழர் சா. ஜீவபாரதி திருவுருவப்பட திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர சிபிஎம் தலைவர்கள், தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி நகராட்சி முக்கிய அறிவிப்பு

திருத்துறைப்பூண்டி, ஜூலை 3- ழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம்-2022 (தமிழ்நாடு சட்டம் 35/2022)-இன் அத்தியாயம் x-a உடன் சேர்த்து படிக்கப்பட்ட பிரிவு 199, அத்தியாயம் XI ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, திருத்துறைப்பூண்டி நகராட்சியின் அதிகார வரம்பிற்குள் அமைந்துள்ள கட்டிடங்களில் கழிப்பறைகள் மற்றும் செப்டிக் தொட்டிகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அங்கு உருவாகும் கழிவுநீரை சேகரித்தல், கொண்டு செல்வது மற்றும் அகற்றுவதை ஒழுங்குபடுத்துவதற்காக கசடுகழிவு மேலாண்மை துணை விதிகள் 2024 (திருத்தப்பட்டது) உருவாக்கப்பட்டு மன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேற்படி விவரம் நகராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஆட்சேபணை இருப்பின், 15 தினங்களுக்குள் நகராட்சி ஆணையரிடம் எழுத்துப் பூர்வமாக அல்லது commr.thiruthuraipoondi@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.