tamilnadu

img

உடுமலை அருகே பழங்குடியினத்தவர் மரணம் வனத்துறையினர் அடித்துக்கொன்றதாக குற்றச்சாட்டு - போராட்டம்

உடுமலை அருகே பழங்குடியினத்தவர் மரணம் வனத்துறையினர் அடித்துக்கொன்றதாக குற்றச்சாட்டு - போராட்டம்

உடுமலை, ஜூலை 31 – தமிழக-கேரள எல்லையில் உள்ள உடுமலைப்பேட்டை அருகே சின்னாறு பகுதியில், புலியின் பல் போன்ற பொருளை வைத்திருந்ததாக கூறி  அழைத்துச் செல்லப்பட்ட மாரிமுத்து (58) என்ற பழங்குடி முதி யவர் வனச்சரக அலுவலகத்தில் மர்ம மான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  வனத்துறையினர் அவரை அடித்துக் கொலை செய்ததாக உற வினர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக-கேரள எல்லையில் உள்ள கேரள மாநில சோதனைச் சாவடியில் புதனன்று நடைபெற்ற வாகன சோதனையின் போது, மேல்  குருமலை செட்டில்மெண்ட் பகுதி யைச் சேர்ந்த மாரிமுத்துவிடம் புலி யின் பல் போன்ற பொருள் இருந்த தாக கூறி கேரள கலால் துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர், அவர் தமிழக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, உடு மலைப்பேட்டை வனச்சரக அலு வலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  இந்நிலையிலேயே வியாழனன்று காலை, மாரிமுத்து வனச்சரக அலு வலகத்தின் ஓய்வு அறையில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளது. இதனிடையே, மாரிமுத்து வனத்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மாரிமுத்துவின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஏராளமானோர் உடுமலை வனத்துறை அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மாரிமுத்துவின் வழக்கறிஞர் பாலசுப்ரமணியம், செய்தியாளர்களிடம் பேசினார். “மாரி முத்து மீது 2017-ல் வனத்துறையால் கஞ்சா வழக்கு பதியப்பட்டிருந்தது. ஆனால், நேற்று முன்தினம் அவர்  குற்றவாளி இல்லை என நீதி மன்றம் விடுதலை செய்தது.  இந்நிலையில், எந்தத் தகவலும் குடும்பத்தினருக்கோ, வழக்க றிஞர்களுக்கோ தெரிவிக்கப்படாமல் அவர் கைது செய்யப்பட்டார். இது நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறிய செயல்,” என்று குற்றம்சாட்டினார். மாரிமுத்துவின் மகள் சிந்து உடுமலை காவல் ஆய்வாளரிடம் அளித்த புகார் மனுவில், வனத்து றையினர் சட்டத்துக்கு புறம்பாக தந்தையை அழைத்துச் சென்ற நிலையில்,  இன்றைக்கு அவர் உயிரிழந்துள்ளார். மனதைரிய முள்ளவர் எனது தந்தை. அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். “மாரிமுத்து மீது புனையப்பட்ட பொய் வழக்கில் நீதிமன்றம் அவரை  விடுதலை செய்ததால், வனத்துறை யினர் ஆத்திரத்தில் அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். இது திட்டமிட்ட கொலை. வனத்துறையினர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட வேண்டும். இது லாக்கப்  மரணமாக விசாரிக்கப்பட வேண்டும்,” என்று மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் வி.செல்வம் கோரிக்கை விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.ஆர்.மதுசூதணன் கூறுகை யில், மலைவாழ் மக்கள் என்பதால் யார் கேட்பார் என்ற ஆணவத்தில் வனத்துறையினர் இதைச் செய்துள்ள னர். நீதிமன்றம் குற்றமற்றவர் என உத்தரவிட்ட ஒருவரை இரவு 11 மணிக்கு சட்டத்திற்கு புறம்பாக அழைத்து சென்றுள்ளனர். மேலும், அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். அருகிலேயே மருத்துவமனை இருந்தும் அழைத்துச் செல்லாதது ஏன்? ஒரு சமயம் புலி பல் என்றும், மறு சமயம் சிறுத்தை பல் என்றும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கின்றனர். வழக்கறிஞரை சந்தித்து விட்டு தனது தற்காலிக குடியிருப்புக்கு திரும்பிய பழங்குடி மாரிமுத்துவிடம் புலி பல் எப்படி இருக்கும்? இது தொடர்பாக குடும்பத்தினர் யாருக்கும் தகவல் அளிக்கவில்லை. இது வனத்துறையினரின்  திட்டமிட்ட  கொலை. எனவே  வனத்துறையினர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட வேண்டும் என கூறினார்.