ஆகஸ்ட் 12ல் சென்னையில் கியூபா ஆதரவு முப்பெரும் விழா
சேலம் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
சேலம், ஆக. 5- ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் கியூபா ஒருமைப்பாட்டுக்கான நிதியுதவி வழங்கும் முப்பெரும் விழா நடைபெற உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்தார். கியூபாவுக்கு ஆதரவு நிதி வழங்குதல், பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய முப்பெரும் நிகழ்வுகளின் சங்கமமாக நடைபெறும் இந்த விழாவில் கியூபாவின் துணைத் தூதர், தமிழக முதலமைச்சர் மற்றும் பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சேலத்தில் நடைபெற்ற கியூபா பாது காப்பு நிதி மற்றும் ‘தீக்கதிர்’ சந்தா வழங்கும் நிகழ்வில் பங்கேற்று பேசிய அவர், கியூபாவை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிதி திரட்டி வருவதாக தெரிவித்தார். கியூபாவின் சவால்கள் 63 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் கியூபா கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். ஐ.நா.வில் உலக நாடுகள் ஆதரவு தெரிவித்த போதிலும், அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடையை நீட்டித்து வருவதாக தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்குத் தடை, கடும் மின்சாரப் பற்றாக்குறை என பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், கியூபா மக்கள் சோசலிசப் பாதையில் உறுதியாக உள்ளதாக பாராட்டினார். அமெரிக்க வரி விதிப்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்போவதாக அறிவித்து, அதனை ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ள நிலையில், இந்தியப் பிரதமர் இதற்கு எதிராக குரல் கொடுக்கத் தயங்குவ தாக விமர்சனம் செய்தார். “ஒரு கோடி மக்கள் தொகைகொண்ட கியூபா அமெரிக்காவை எதிர்த்துப் போராடும்போது, 140 கோடி மக்கள் கொண்ட இந்தியா நாட்டின் பிரதமர் இந்த வரி விதிப்புக்கு எதிராக போராடாமல் மெளனம் சாதிக்கிறார்” என்று கூறினார். விவசாயத்திற்கு அச்சுறுத்தல் அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு கொள்கை இந்திய விவசாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று எச்சரித்தார். அமெரிக்கா தனது உபரி கோதுமை மற்றும் பால் பொருட்களை இந்தியாவிற்கு கட்டாயமாக ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்படும் என்றார். அமெரிக்க விவசாயிகள் 100% மானியம் பெறுகின்றனர், ஆனால் இந்திய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500 மட்டுமே மானியம் கிடைப்பதை சுட்டிக்காட்டினார். இந்த நிபந்தனைகளுக்கு அடிபணிந்தால், இந்திய விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று எச்சரித்தார். எண்ணெய் விலை பாதிப்பு ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டார். இதனால், கூடுதல் விலைக்கு அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை ஏற்படும், இது பெட்ரோல், டீசல் விலையை மேலும் அதிகரிக்கும் என்றார். தீக்கதிர் சந்தா கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ‘தீக்கதிர்’ நாளிதழுக்கான சந்தா தொகை ஒப்படைக்கப்பட்டது. 147 ஆண்டு சந்தா, 76 ஆறு மாத சந்தா என மொத்தம் 223 சந்தாக்களுக்கான ரூ.4,29,300-ம், கியூபா ஒருமைப்பாட்டு நிதி ரூ.83,450-ம் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட கே.பால கிருஷ்ணன், “இடதுசாரி அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் ‘தீக்கதிர்’ பத்திரிகை பெரும் பங்காற்றி வருகிறது. சேலம் மாவட்டத்தில் பத்திரிகையின் சந்தாவை வலுவாக உயர்த்துவதன் மூலம் கட்சி அமைப்பை வலுப்படுத்த முடியும்” என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துகண்ணன் தலை மையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், ‘தீக்கதிர்’ கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.