tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்....சிபிஐ விசாரணை குறித்த நிலை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

மதுரை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் இதுவரை சிபிஐ தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விசாரணை நிலை அறிக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வெள்ளியன்று தாக்கல் செய்யப் பட்டது.

மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.  இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்கே.எஸ்.அர்ச்சுனன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியும், 4 மாதத்தில் விசாரணையை முடிக்கவும் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டது. இதையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 

இந்த நிலையில் சிபிஐ  இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு, அதில் 100 ஆவணங்களுக்கு பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 300நபர்களிடம் விசாரணை செய்யப் பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.மேலும் துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள், அதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, பொதுமக்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்தனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட காலஅவகாசத்தை நீட்டித்து கூடுதல் கால அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், தாரணி முன்பு வெள்ளியன்று நடைபெற்றது. 

அப்போது சிபிஐ இயக்குநர் தரப்பில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில்  காவல்துறை  மீதானகுற்றச்சாட்டுகள் குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசார ணை குறித்தும் சிபிஐயின் விசாரணை நிலை அறிக்கை  சீலிடப்பட்ட கவரில்தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து  நீதிபதிகள் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர். தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன், சுப்பு முத்துராமலிங்கம், கிஷோர் ஆகியோர் ஆஜராகினர். கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுனனும் ஆஜராகியிருந்தார்.

;