அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி திருவேங்கடபுரம் அருந்ததியர் மக்கள் மனு அளிப்பு
திருவில்லிபுத்தூர், செப்.12- திருவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அச்சம் தவிர்த்தான் ஊராட்சி பகுதியில் திருவேங்கடபுரம் காலனி பகுதி உள்ளது .இப்பகுதியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்ட நெடுங்காலமாக வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஊராட்சியில் சார்பில் தெருவிளக்கு, சாலை வசதி, சுகாதார கழிப்பிடம், சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரையிலும் செய்து தரப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வாறுகால் சிதிலமடைந்து கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இறந்தவர்களை புதைப்பதற்கு மயான வசதி இல்லை தற்போது வரை ஓடைகரையில் புதைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த பல வருடங்களாக அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை இல்லை. இந்நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை என்று கிராம மக்கள் சார்பில் ஊர் நிர்வாகிகள் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்க வருகை தந்தனர். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஆணையாளர் இல்லாத நிலையில் அலுவலக மேலாளரிடம் மனுவை கொடுத்தனர் இந்நிகழ்வில் ஊர் நிர்வாகிகள் சர்க்கரை ,மாரி செல்வம் முருகன் மற்றும் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒரு வார காலத்திற்குள் மனு குறித்து உரிய பதில் வரவில்லை என்றால் கிராம மக்களை திரட்டி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை நடத்துவோம் என்று கூறினர்.