வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர், அக். 21- திருவாரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், அகர ஓகை கிராமம் வலங்கைமான் மெயின் ரோட்டில், சாலை ஓரத்தில் சாய்ந்துள்ள மரம் வெட்டப்பட்டு அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியரகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. தொலைபசி எண்ணிலும் 04366-226623 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 04366-1077 தொலைபேசி எண்ணிலும், மேலும், 90439-89192 அல்லது 93456-40279 ஆகிய எண்ணிகளிலும் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 176 பகுதிகளில் வெள்ள பாதிப்பு இருக்கும் என கண்டறியப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளன. கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னேற்பாடாக 20 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9,000 மின்சார கம்பங்களும் 250 கிலோ மீட்டர் மின்கம்பிகளும் 25 மின்மாற்றிகளும் இருப்பில் உள்ளன. மீட்புப் பணிகளுக்கென மொத்தம் 327 ஜே,சி.பி.க்களும், 322 ஜெனரேட்டர்களும், 352 மின் மோட்டார்களும் 586 மரம் அறுக்கும் கருவிகளும் மற்றும் 39 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. வெள்ள நீரினால் உடைப்புகள் ஏதும் ஏற்பட்டால், உடனுக்குடன் சரிசெய்ய நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை வசம் 34,000 மணல் மூட்டைகளும், தேவையான சவுக்கு கட்டைகளும் பல்வேறு இடங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான நீர் நிலை அருகில் பொதுமக்கள் செல்லாதவாறு காவல்துறை ரோந்து பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ஊரக, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில், வெள்ள நீர் ஏதும் தேங்கினால் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. ஊரக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில், பாதுகாப்பான குடிநீர் வழங்க தகுந்த குளோரினேற்றம் செய்யப்படுகிறது. வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை மூலமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ள குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்ட பகுதிகள் கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், தொடர்ந்து மழையிலிருந்து பாதுகாப்பாக வைக்கவும் இயக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
