தீண்டாமைச் சுவரை அப்புறப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தீஒமு வேண்டுகோள்
திருவாரூர், செப். 5- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி தீண்டாமைச் சுவரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில் பத்து, நடுத்தெரு, மேலத்தெரு, பாதிரிபுரம் பகுதி பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை, செல்வமணி நகர் உரிமையாளர் 11 அடி தீண்டாமை சுவர் அமைத்து பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை அடைத்தார். இதைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாலைமறியல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வலங்கைமான் வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மீட்டுத் தருவது என வட்டாட்சியர் பேச்சுவார்த்தையின் போது, உத்தரவாதப்படுத்தியதை அடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மாவட்ட தலைவராக செயல்படும் தோழர் கே. முரளி, வலங்கைமான், தீண்டாமைச் சுவர் உள்ள பகுதியில் வசிப்பவர். தீண்டாமை சுவர் எழுப்பிய நில உரிமையாளர், தீண்டாமை சுவர் அமைத்ததோடு பட்டியலின மக்களுக்கு பாதையை கொடுக்க தொடர்ச்சியாக மறுத்து வந்தார். தோழர் முரளி தான் தீண்டாமைச் சுவர் இருப்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தினார். இந்த பிரச்சனையில் தலையீடு செய்ததற்கு மிக முக்கியமான காரணம் அவர்தான் எனக் கருதிய நில உரிமையாளர், பட்டியலின மக்களுக்குள் பிரிவினையை உருவாக்கும் நோக்கில், கடந்த புதன்கிழமை கூலிப்படையை ஏவி தோழர் முரளி, அவரது மனைவி, அவரது தாயார் ஆகிய மூன்று பேரையும் அரிவாள் போன்ற ஆயுதங்களோடு கடுமையாக தாக்கிவிட்டு, தோழர் முரளியின் கைப் பேசியில் தான் தீண்டாமை சுவர் தொடர்பான அத்தனை ஆவணங்களும் இருக்கிறது. இதை முதலில் உடையுங்கள் என்று சொல்லி, கைப்பேசியை சுக்குநூறாக உடைத்து நொறுக்கிவிட்டு முரளி உள்ளிட்ட குடும்பத்தினரை கடுமையாக தாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். தாக்கப்பட்ட முரளி, உயிர் தப்பி காவல் நிலையம் சென்றபோது, எல்லோரும் குடியரசு தலைவர் வருகையை ஒட்டி அங்கு சென்றதால் காவல் நிலையத்தில் ஆட்கள் இல்லை. நீங்கள் மருத்துவமனைக்குச் சென்று விடுங்கள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். தற்போது முரளி, அவரது மனைவி, அவரது தாயார் மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வலங்கைமான் காவல்துறையின் மெத்தனப் போக்கும் அடாவடியும் தான் இத்தகைய அராஜகத்திற்கு காரணம். அதேபோல், அங்குள்ள வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவுதான், இன்றைக்கு வன்முறை சம்பவம் நடந்திருக்கிறது. மேலும் இதுபோன்று நடைபெறாத வண்ணம் சம்பவ இடத்தில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.