ஒன்றிய அரசின் புதிய மசோதா ஜனநாயகத்துக்கு எதிரானது
பெ. சண்முகம் குற்றச்சாட்டு
மயிலாடுதுறை, ஆக. 21 - ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றிய 130-ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; மோடி, அமித்ஷாவுக்கு பிடிக்காத பாஜக முதலமைச்சர்களையும் இச்சட்டத்தை பயன்படுத்தி பதவியில் இருந்து அப்புறப்படுத்த வாய்ப்பு இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். மயிலாடுதுறையில் வியாழன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய அரசு புதனன்று அரசியல் சாசனத்தின் 130-வது திருத்தம் என்ற பெயரில் மூன்று புதிய மசோதாக்களை தாக்கல் செய்துள்ளதாக கூறினார். முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பிரதமர் உள்பட யாராக இருந்தாலும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்கள் தானாகவே பதவி விலக நேரிடும் என்ற புதிய விதி இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு என்ற பெயரில் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்து கொண்டிருக்கின்றனர். இதன்மூலம் பிடிக்காத முதலமைச்சர், அமைச்சர்களை கைது செய்து 30 நாட்களுக்கு மேலாக வைக்க காவலில் வைத்து பதவியைப் பறிக்க முடியும் என்றார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஆணவத்தில் உருவாக்கும் இந்த புதிய மசோதாவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் மாநில அரசாங்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையாகும் என்றும் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் இந்த மசோதாவை எதிர்த்து வலுவான கண்டனப் போராட்டங்களை நடத்துவோம் என்றார். சாதி ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் வேண்டும் 2017-2025 ஆண்டுகளுக்கு இடையில் 65 சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்றதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்ற பெ. சண்முகம், கல்வி, அரசியல், பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள தமிழ்நாட்டில் இதுபோன்ற சாதி ஆணவக் கொலைகள் நடைபெறுவது மிகப் பெரிய தலைகுனிவு என்றார். சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தானும், சிபிஐ மாநில செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகிய மூவரும் கடந்த 6-ஆம் தேதி தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். “பணி நிரந்தரம் கூடாது, தனியாருக்கு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் தலையிட முடியாது” என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது நீதிமன்றத்தின் தனியார்மயத்துக்கு ஆதரவான தீர்ப்பாகும். எனவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல என்றார். துப்புரவுப் பணியாளர்களின் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மயிலாடுதுறை மாவட்ட செயக்குழு உறுப்பினர் ்துரை ராஜ் உடன் இருந்தனர்.