tamilnadu

img

மீளவிடாமல் தாக்கும் மோடி அரசு ....தொழில் வணிகத் துறையினர்  கொதிப்பு....

மதுரை:
கொரோனா கால நெருக்கடியிலிருந்து சற்று மீண்டுவரக்கூடிய நிலையில் 69 சதவீத வரிகளுடன் பெட்ரோல்,டீசல் விலையைஉயர்த்தி, தொழில் வணிகத்துறையிரை யும் பொதுமக்களையும் மீண்டுவரவிடாமல் மத்திய மோடி அரசு தாக்குதலைதொடுத்துள்ளது என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கண்டித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நம்நாட்டில் உற்பத்திப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் போக்குவரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 12-வது நாளாக பிப்ரவரி 20 சனிக்கிழமையன்று பெட்ரோலுக்கு 0.35 பைசா உயர்த்தப்பட்டு லிட்டர் ஒன்று ரூ.93.14 பைசாவாகவும், டீசலுக்கு 0.36 பைசா உயர்த்தப்பட்டு லிட்டர்  ஒன்று ரூ.86.55 பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை உயர்வு தொடரும் பட்சத்தில், இவ்வாண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்ட சபை தேர்தல் முடிந்த பின்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்குரூ.100-ஐ தாண்டினாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் முதல் அனைத்து பொருட்களின் உற்பத்தி மற்றும் தயாரிப்புகளின் விலைகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன. இந்தத் தொடர் விலை உயர்வால் தொழில் வணிகப் பெருமக்களும், பொதுமக்களும், சாமானியர் களும் தங்களது அன்றாட வாழ்க்கை முறையில் பெரிய அளவிலான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

2021 - 2022-ஆம் ஆண்டிற்கான மத்தியபட்ஜெட் 01.02.2021 -ஆம் நாள் சமர்ப்பிக்கப் பட்டபோது பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.89.37 பைசாவாகவும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.82.29 பைசாவாகவும் விற்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் நலனுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீது செஸ் வரி ரூ.2.50 விதிக்கப்படுவதாகவும் ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயராது; இந்த செஸ் வரி மத்திய கலால் வரியில் உள்ளடக்கி சரிசெய்யப்படும் என அறிவிக்கப் பட்டது. ஆனால் மத்திய பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் செஸ்வரி படிப்படியாக உயர்த்தப்படும் என செய்தி வெளியிட்டது. அவ்வாறே மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட 20 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4.00 -ம் , டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 4.30-ம் உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

ஒரு லிட்டர் பெட்ரோல் , டீசல் அடிப்படை விலை ரூ.31.82 ஆக இருக்கும் போது மத்திய அரசின் கலால் வரி பெட்ரோலுக்கு ரூ.32.98 காசும், டீசலுக்கு ரூ.31.83 காசும்  மற்றும் மாநில அரசின் மதிப்புக் கூடுதல் வரி பெட்ரோலுக்கு 34 சதவீதம் விதிக்கப்பட்டு லிட்டர் ஒன்றுக்கு ரூ.19.48 பைசாவும், டீசலுக்கு 25 சதவீதம் விதிக்கப்பட்டு லிட்டர் ஒன்றுக்கு ரூ.15.33 பைசாவும் மற்றும் சாலைப் போக்குவரத்துக் கட்டமைப்பு செஸ் மற்றும் விவசாயிகளின் நலனுக்கான செஸ் வரி எனஉலகிலேயே நம் நாட்டில் தான் பெட்ரோல்,டீசல் மீது அதிகபட்சமாக 69 சதவிகித வரிகள் விதிக்கப்பட்டு தொழில் வணிகத்  துறையினர் மீதும், பொதுமக்கள் மீதும் சுமத்தப்படுகின்றது.சரக்குப் போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலைதொடர் உயர்வால் சரக்கு லாரி கட்டணம் 25சதவிகிதம் உயர்த்தப்படும் என தற்போது அறிவிப்பு செய்துள்ளனர்.இதனால் சரக்கு லாரி வாடகை கணிசமாக உயரும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் மற்றும் தினசரி மார்க்கெட்டுக்கு விவசாயிகளால் கொண்டுவரப்படும் காய்கறிகள், பழங்கள் விலை உயரக்கூடும். கடந்த வருடம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் பாதிப்பால் தொழில் வணிகம் மிகவும் நலிவுற்று தற்போது சற்று மீண்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு தொழில் வணிகத் துறையினரையும், பொதுமக்களையும் மிகுந்த பாதிப்புக்குஉள்ளாக்கி கடுமையான நிதி நெருக்க டிக்கு உள்ளாக்கியுள்ளது.

நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் கலால்மற்றும் மதிப்புக் கூட்டு வரியைக் கணிசமாகக் குறைத்து, மிகுந்த நிதி நெருக்கடியில் இருக்கும் தொழில் வணிகத் துறையினரையும், பொதுமக்களையும் காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 
 

;