tamilnadu

img

ஒன்றிய அரசு மூடிய ஆலையை கேரள அரசு திறந்தது

கோட்டயம், மே 22 - ஒன்றிய அரசு முதலீட்டு (பங்கு) விலக்கல் கொள்கையை கடைப் பிடித்து வரும் இவ்வேளையில், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதில், ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்னுதாரணமாக கேரள அரசு திகழ்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரி வித்தார். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள  வெள்ளூரில் ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிடெட் (எச்என்பிஎல்) என்னும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதை தனியா ருக்கு தாரைவார்க்க முடிவு செய்த போது கேரள அரசு அதை கையகப் படுத்தியது. கேரளா பேப்பர் புராடக்ட்ஸ் லிமிடெட் (கேபிபிஎல்) என்கிற பெயர் மாற்றத்துடன் செயல்படத்தொடங்கியுள்ள இந்த நிறுவனத்தை முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், கேபிபிஎல் நிறுவனம் நாட்டிலேயே முன்னணி காகித உற்பத்தி பிரிவாக மாற்றப்படும் என்றார். ஐந்து லட்சம் டன் காகிதம் உற்பத்தி செய்யும் திறன் மற்றும் ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்கான வர்த்தகம் செய்வது இதன் நோக்கம். பொதுத் துறை நிறுவனங்களைப் பாது காப்பதில் ஒன்றிய அரசின் அணுகு முறை மற்றும் தவறான நிர்வாகத்தால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனம் இது. கேபிபிஎல் நிறுவனத்தை நவீனப்படுத்தவும், நவீன இயந்திரங் களை வழங்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வும், ஊழியர்களின் திறன் மேம்பாட்டிற்கும் அரசு ஆதரவை வழங்கும். நிர்வாகமும், ஊழியர் களும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறி, நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பாடு பட வேண்டும் என்றார். வளர்ந்த நடுத்தர வருவாய் நாடுகளைப் போன்ற வாழ்க்கைத் தரத்தை எட்டும் நோக்கத்துடன் அரசு  இலக்கை நிர்ணயித்துள்ளது. கே-ஃபோன் K-FON (கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்) திட்டம்  விரைவில் துவக்கப்படும். மாநிலத்தின் தொழில்துறையை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  மாநிலத்தில் குறுகிய காலத்தில்  83,541 எம்எஸ்எம்இகள் தொடங்கப் பட்டு ரூ.7,900 கோடி முதலீட்டைக் கொண்டு வந்து 2.98 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியது என்றார் முதல்வர்.

விழாவுக்கு தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தலைமை வகித்தார்.  அப்போது அவர் பேசுகையில்,  பொதுத்துறை நிறுவனங்களை நவீனமயமாக்கும் போது அரசு தொழில்முறை மேலாண்மை உத்தியை செயல்படுத்தும். கொள்கை விஷயங்களில் மட்டுமே அரசு தலையிடும். பணியாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் பதவி உயர்வு என்பது முற்றிலும் திறமை  மற்றும் செயல்திறனின் அடிப்படையில் மட்டுமே இருக்கும் என்றார்.  கடும் மழையிலும் தொடக்க  விழாவைக் காண தொழிற்சாலை வளாகத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.என்.வாசவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;