போதை பொருட்களை ஒழிக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
அறந்தாங்கி பெதுக்கூட்டத்தில் என். பாண்டி வலியுறுத்தல்
அறந்தாங்கி, ஆக. 7- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அம்மா உணவகம் அருகில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதகம் செய்யும் காவல்துறை செயல்பாட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் நாராயணமூர்த்தி, நகரச் செயலாளர் அலாவுதீன், ஆவுடையார்கோவில் ஒன்றியச் செயலாளர் கலந்தர், திருவரங்களம் ஒன்றியச் செயலாளர் குமாரவேல், அரிமளம் ஒன்றியச் செயலாளர் ராமையா ஆகியோர் தலைமை வகித்தனர். அறந்தாங்கி பகுதியில் தட்டுப்பாடுன்றி கஞ்சா புழக்கம், தடையின்றி பிளாக்கில் மது விற்பனை, தொழில்முறை ரவுடிகளின் தங்கு தடையற்ற அட்டகாசம், புகார் கொடுக்கும் மக்களை, மாத கணக்கில் அலையவிடும் அறந்தாங்கி காவல் துறை அதிகாரிகள், காரணிக்காட்டில் பர்வீன் பானு கொலை வழக்கில் அவசர கதியில் விசாரணை நீர்த்துப்போக செய்த நாகுடி உதவி ஆய்வாளர், அறந்தாங்கி ஆய்வாளர் செயல்பாட்டை கண்டித்தும் ஆவுடையார் கோவில் இரட்டை கொலை, காரணிக்காடு பர்வீன்பானு, கொலை என தினந்தோறும் அரங்கேறும் கொடுமைகளுத் தக்க நடவடிக்கை எடுக்காத காவல் துறை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் கவிவர்மனுக்கு காவல்துறையினரே கொலை மிரட்டல் விடுத்தவற்றை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி, கந்தர்வகோட்டை மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கவிவர்மன், ஜெயபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி பேசம்போது, பீகாரில் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தம் என்று 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் வட இந்தியர்களை வாக்காளர்களாக சேர்த்து அதிகாரத்திற்கு வர பாஜக முயற்சிக்கிறது, ஆகவே வாக்காளர் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் போராட்டம் நடத்த இருக்கிறது. சாதியை சொல்லி மதத்தை சொல்லி உழைப்பாளி மக்களை துண்டாடுவதற்கு பாஜக பல்வேறு வடிவங்களில் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்ச்சிகளை எல்லாம் நாம் முறியடிக்க வேண்டும். பல்வேறு துறைகளில் கல்வி அறிவு, மருத்துவம், நாகரீக முன்னேற்றம், விஞ்ஞான ரீதியாகவும் தமிழகம் முன்னேறி இருக்கிறது. ஆனால் சாதி ஆணவம் எண்பது இங்கு குடிகொண்டிருக்கிறது. சாதி ஆணவ கொலைகள் நடைபெறுகிறது. காதல் திருமணம் செய்யும் தம்பதியர்களை பெற்ற பிள்ளை என்று கூட பார்க்காமல் பெற்றோர்களே வெட்டி கொலை செய்கிறார்கள். தமிழகத்தில் ஏராளமான போதை பொருட்கள் புழக்கத்தில் இருக்கிறது. பள்ளி, கல்லூரி இருக்க கூடிய பகுதிகளில் தாராளமாக போதை பொருட்கள் விற்பனை ஆகி கொண்டிருக்கிறது. இப்படி மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பல கொலைகளுக்கு காரணமாகிறது. எதற்கு என்று தெரியாமல் பணத்திற்காக கொலை செய்கிறார்கள். போதை பொருட்களை தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுப்பதில்லை. இங்கு அறந்தாங்கி காவல் துறை மெத்தனப் போக்கால் திருட்டு, கொலைகள் நடக்கிறது. தடுக்க தவறிய, சரியான நடவடிக்கை எடுக்காத அறந்தாங்கி. காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸிட் கட்சி கேட்டுக கொள்கிறது என்றார்.