தலைமை தேர்தல் ஆணையர் இன்று தமிழகம் வருகை விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு
சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பிப்ரவரி 25ஆம் தேதி புதுச்சேரிக்கு சென்றார். பிப்.26 (வியாழன்) அன்று சென்னைக்கும் வருகை தர உள்ளார். அவரது வருகையை அடுத்து மார்ச் மாதம் தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதோடு, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறை கண் காணிப்பாளர்களுடனும் சட்டம்-ஒழுங்கு, வாக்குச்சாவடி பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு நடத்துவார். பிப்ரவரி 27 அன்று வருமான வரித்துறை, காவல்துறை, ரயில்வே உட்பட 20-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அலு வலர்களுடன் ஆலோசிப்பார். அனைத்து கூட்டங்களும் நிறைவடைந்த பிறகு பிப்.27 நண்பகலில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அன்புமணி, தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், அன்புமணி ராமதாஸ் மற்றும் தேர்தல் ஆணை யம் ஆகியோருக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தந்தை-மகன் இடையே ஏற்பட்ட தகராறால் பா.ம.க. இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அன்பு மணி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவும், தன்னை கட்சி யின் தலைவராக அறிவிக்கவும் கோரி ராமதாஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதி எம். தர்மபிரபு முன்பு வந்த இந்த மனு விசாரணை யில் ராமதாஸ் தரப்பினர், கட்சி நிறுவனரின் அனுமதியின்றி பிறர் கட்சியின் பெயர் உட்பட எதையும் பயன்படுத்த முடியாது என வாதிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அன்பு மணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இவ்வழக்கு விசாரணை மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாசிச சக்திகளை வீழ்த்துவோம்! துணை முதல்வர் உறுதி
சென்னை: அம்பேத்கர் கனவு கண்ட சமத்துவத்தையும் மத நல்லிணக்கத்தையும் காக்க வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் கூறினார். சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பேசிய அவர், பெரியா ரும் அம்பேத்கரும் சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக யார் எதிரி என்று தெளிவாக அடையாளம் காட்டியவர்கள். தமிழர்கள் எதிரிகளை சரியாக அடையாளம் கண்டுகொண்டதால்தான் பாசிச சக்திகளால் இன்று வரை தமிழ்நாட்டை நெருங்க முடிய வில்லை என்று வலியுறுத்தினார். 12 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசு தமிழ் நாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றம் சாட்டிய உதயநிதி, பாசிச சக்திகளும் அவர்களது கூட்டாளிகளும் அனைத்துத் தொகுதிகளிலும் வைப்புத்தொகை இழக்க வேண்டும் என்றார்.